முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
கோவை: கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸில் கலெக்டர் பங்களாவுக்கு பின்புறம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது.
பழுதடைந்த காரணத்தால், அக்குடியிருப்புகளில் வசித்தவர்களை வெளியேற்றி, இடிக்கப்பட்டது. அவர்கள், கவுண்டம்பாளையம் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தனர். அவர்களது ஓட்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் இடம் பெற்றிருக்கிறது; அதே சமயம், தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருக்கிறது.
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமார், 2023 முதல் 2025 வரை 2 ஆண்டு கோவையில் பணிபுரிந்தார். கலெக்டர் வீட்டு முகவரி எண்: 267, அரசு கலை கல்லுாரி ஓட்டுச்சாவடியில் ஓட்டளிப்பார். பாகம் எண்: 73ல் வரிசை எண்: 720ல் அவரது பெயர் இன்னமும் இருக்கிறது. கிராந்திகுமார் மாறுதலாகிச் சென்று ஓராண்டாகி விட்டது. அதுமட்டுமின்றி, சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்த அவர், இப்போது முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது, தமிழகத்தில் இருந்தே அவர், சென்று விட்டார். மாவட்ட தேர்தல் அதிகாரியின் வீட்டு முகவரியில், பழைய கலெக்டரின் பெயர் இன்னமும் இடம் பெற்றிருப்பது கூட தெரியாமல், தேர்தல் பிரிவினர் செயல்படுவது, அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.