இதே நாளில் அன்று

ஏப்ரல் 11:

குஜராத் மாநிலம், போர்பந்தரில், வசதி மிக்க வணிகரான கோகுல்தாஸ் கபாடியா - விரஜ்குன்வர்பா கபாடியா தம்பதியின் மகளாக, 1869ல், இதே நாளில் பிறந்தவர், கஸ்துார்பா.
இவருக்கு, 13 வயதாக இருந்தபோது, அதே வயதுடைய, தன் உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் மகாத்மா காந்தியை மணந்தார். திருமணத்துக்கு பின், இவருக்கு காந்தியே கல்வி கற்பித்தார்.

மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு, பிரிட்டன் சென்று வழக்கறிஞர் படிப்பை முடித்த காந்தி, தென்னாப்பிரிக்காவில் வேலைக்காக சென்றபோது, இவரையும் அழைத்து சென்றார். அங்கிருந்த நிறவெறி, இந்தியர்கள் மீதான வரிக்கு எதிராக இருவரும் போராடி, சிறை சென்றனர்.

காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, அஹிம்சை, சத்தியாகிரக கொள்கைகளை ஏற்று, பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தினார். நாடு திரும்பியதும், சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார்.

'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள, ஆகாகான் அரண்மனை சிறையில் அடைக்கப்பட்டவர், உடல்நலக் குறைவால், 1944, பி ப்ரவரி 22ல், தன் 74வது வயதில் மறைந்தார்.

'தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக' கொண்டாடப்படும் கஸ்துார்பா காந்தியின் பிறந்த தினம் இன்று!

Advertisement