கல்வியாளர்களின் கலங்கரை விளக்கு 'தினமலர்'

'எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வம்' என்ற, மகாகவி பாரதியின் வைர வரிகளுக்கு ஏற்ப, தெய்வ பக்தியும், தேசபக்தியும் மிக்க, ஒரு பத்திரிகை உண்டு என்றால், அது 'தினமலர்' மட்டுமே.

ஒரு கர்பிணிக்கு பிரசவம் என்றால், அது ஒரு ஆண்டில் ஒரு முறைக்கு மிகாது. தினமலருக்கு தினந்தோறும் பிரசவம். நாள் தவறாமல், மொழி நடை தவறாமல், எந்தவித சமரசத்துக்கும் இடம் தராமல், நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் தீமைக்கஞ்சாது, ஆட்சி அதிகாரங்களுக்கு அடிபணியாது, லஞ்ச, ஊழலுக்கு எதிராக, கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாத, பாரத பண்பாட்டுக்கு பாதகம் செய்யாமல் கலை-கலாசாரம் காத்திட, தமிழ் மண்ணின் மரபை போற்றி பாதுகாக்கும், ஒரே நாளிதழ், தினமலர் என்று சொன்னால் மிகையாகாது.

பள்ளி மாணவன் முதல், பல்கலை மாணவர்கள் வரை, ஆசிரியர்கள் முதல் பேராசிரியர்கள் வரை, நாளும் படிக்கும், நம்பிக்கையான நல்ல இதழ், தினமலர் நாளிதழ்.

எங்கள், 'தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கம்'உறுப்பினர்கள், நாள் தவறாமல் படிக்கும், எங்கள் சங்கத்தின் நாளிதழாகவே, தினமலர் உள்ளது. ஒரு நாள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவோம். 'தினமலர்' வாசிக்காமல், எங்களால் இருக்க முடியவில்லை. நிறம் மாறாமல்; விளம்பரங்களுக்கு விலைபோகாமல்; ஜாதி, மத, இன, மொழி, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு, உள்ளதை, உள்ளபடி உரைக்கும், உன்னதமான நாளிதழ் தினமலர். இதை நாங்கள் நன்கு அறிவோம். நம் நாடும் நன்கு அறியும்.

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் வாசிக்கும் தினமலரில், எங்கள் பிரச்னைகள் பற்றி வராத நாட்களே இல்லை.

தனியார் பள்ளிகளின் கோரிக்கைகள், பிரச்னைகளுக்கு தீர்வுகள், அரசாணைகள் எல்லாம் எங்களுக்கு கிடைக்கப் பெற்றது, தினமலரின் அசைக்க முடியாத செய்திகளால் என்று சொன்னால் மிகை ஆகாது. அங்கீகார பிரச்னை, ஆர்.டி.இ., கல்வி கட்டண பாக்கி கிடைக்க செய்தல், கல்வி கட்டண பிரச்னையில் உள்ள சிக்கல்களை தீர்த்தல், தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கல்வி திட்டம், பள்ளி கல்வி துறை சார்ந்த சட்ட-திட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் எல்லாவற்றையும் பற்றி எழுதி தீர்வு கிடைக்க செய்வதில், தினமலருக்கு பெரும் பங்கு உண்டு.

தனியார் பள்ளிகளில் இறைவணக்க நேரங்களில், தினமலர் தலைப்புச் செய்திகள் படிக்க தொடங்கி, நுாலகங்களில் தினமலர் நாளிதழ் படிக்கும் எங்கள் பள்ளி மாணவர்களை, இளம் எழுத்தாளர்களாக, சிந்தனையாளர்களாக, பேச்சாளர்களாக ஊக்குவித்து, உயர்த்தி உள்ளது. தினமலர் நாள்தோறும் வெளியிடும், 'பட்டம்' நாளிதழ், எங்கள் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறக்க, ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி. மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை, கற்கும் ஆற்றலை, கற்பனை திறனை வளர்ப்பதில், பெரும் பங்காற்றி வருகிறது.

சதாரணமானவர்களையும், அசாதாரணமானவர்களாக மாற்றும் வல்லமை, தினமலருக்கு மட்டுமே உண்டு. ஆம், அபாரம், அற்புதம், தினமலர் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். தினமலர் கல்வியாளர்களுக்கு, ஒளி விளக்கு மட்டுமல்ல, கலங்கரை விளக்கும் கூட. பவள விழா கொண்டாடும் தினமலர், நுாற்றாண்டு மட்டுமல்ல, இந்த உலகம் உள்ளளவும் உயர்ந்து சிறந்து ஒளிவீச வேண்டும். தினமலர் நாளிதழின் நிர்வாகத்திற்கும், வாசகர்களுக்கும், எங்கள் சங்கம் சார்பில் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.



- முனைவர் கே.ஆர்.நந்தகுமார்

மாநில பொதுச் செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம்.

Advertisement