எனது சாதனைகளை மறைக்க முயற்சி ;வி.சி.க., எம்.எல்.ஏ., மீது அருண்மொழி தேவன் 'அட்டாக்'
விருத்தாசலம்: எனது சாதனைகளை தன்னுடைய சாதனைகள் போல, கூறி ஏமாற்றியதாக, வி.சி.க., எம்.எல்.ஏ., மீது, அருண்மொழிதேவன் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
கடலுார் மாவட்டம், புவனகிரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன், விருத்தாசலம் ஒன்றிய கிராமங்களில் நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
வார இதழ் ஒன்றில் பேட்டி எடுத்த போது, எனது தொகுதியில் செய்த சாதனைகளை கூறினேன். அப்போது வெள்ளாற்றில் பாலங்கள், தடுப்பணைகள் கட்டியது குறித்து தெரிவித்தபோது, வி.சி., கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன் செய்ததாக கூறியதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆவணங்களை அவர்களிடம் கொடுத்தபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சிந்தனைச்செல்வன் பொய்யாக கூறியதாக அவர்களே வெளியிட்டனர். மத்திய அரசு திட்டங்கள் மீது ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் நிறைவேற்றியதுபோல கூறுவதுபோல, அந்த கூட்டணியில் உள்ள வி.சி., கட்சி எம்.எல்.ஏ.,வும் எனது சாதனைகளை, ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க முயற்சித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், வி.சி., கட்சி எம்.எல்.ஏ., மீது அ.தி.மு.க., வேட்பாளரின் குற்றச்சாட்டு, தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.