ஓட்டுப்பதிவு அதிகரிப்பால் அரசியல் கட்சிகள் கலக்கம்: தேர்தல் முடிவை கணிக்க முடியாமல் திக்... திக்...

1

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஓட்டு சதவீதம் 91.23 பதிவாகியுள்ளதால் முடிவினை கணிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.

புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு அமைதியாகவும், உற்சாகமாகவும் நிறைவடைந்துள்ளது. மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் பல்வேறு கோணங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் - 91.23 சதவீதம் என்ற இமாலய ஓட்டு பதிவாகும். இது மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ள ஓட்டுப்பதிவு. எப்போதும் இல்லாத அளவிற்கு குடும்பம் குடும்பமாக வாக்காளர்கள் திரண்டு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றது, எதிர்கால அரசியல் பாதையை மாற்றக்கூடிய முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

என்னவாக இருக்கும்...



பொதுவாக, ஒரு தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்தால் அது பல்வேறு அர்த்தங்களை தரக்கூடும். மக்கள் நிலவும் ஆட்சியால் திருப்தியில்லாதபோது அதிகமாக வந்து ஓட்டளிப்பார்கள். ஆட்சியின் செயல்பாடுகளில் திருப்தி இருந்தாலும், அதை உறுதிப்படுத்த மக்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். புதிய தலைமுறை அரசியலில் ஆர்வம் காட்டும் போது ஓட்டுபதிவு உயரும். மக்கள் தங்கள் ஓட்டின் மதிப்பை உணர ஆரம்பித்தாலும் ஓட்டு பதிவு அதிகரிக்கும். ஆனால் புதுச்சேரி இதில் எதனை 'டிக்' செய்து மவுனமாக ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவில்லை.

அரசியல் கட்சிகள் பதட்டம்



இந்த வரலாறு காணாத அதிக ஓட்டுபதிவு அரசியல் கட்சிகளுக்குள் ஒருவிதமான பதட்டத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த ஓட்டு எங்களுக்கு சாதகமா அல்லது எதிர்க்கட்சிக்கா என்ற கேள்வி ஒவ்வொரு வரின் மனதிலும் ஓடிக் கொண்டிருப்பதால், வெற்றியா.. தோல்வியா என்பதை கணிக்க முடியாமல் அரசியல் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.

ஆளும் அணியின் நம்பிக்கை



தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தங்களின் ஆட்சிக்கால சாதனைகளை முன்வைத்து நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்தது. பொங்கல் பரிசு, மகளிர் உரிமத் தொகை, முதியோர் பென்ஷன் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் நேரடியாக மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளதால், அதற்கான பரிசு தான் ஓட்டாக கிடைத்திருக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு



மற்றொரு பக்கம், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி வேறு கோணத்தில் இந்த அதிக ஓட்டுப்பதிவை பார்க்கிறது. போலி மருந்து விவகாரம் போன்ற பிரச்னைகள் மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தான் மக்கள் திரண்டு வந்து மாற்றத்திற்கான ஓட்டினை பதிவு செய்துள்ளனர் என அவர்கள் நம்புகின்றனர்.

மூன்றாவது வாய்ப்பு..



அதே சமயம், இளைஞர்களின் மனநிலை மாற்றம் புதிய அரசியல் சாத்தியங்களை உருவாக்கியுள்ளது. பாரம்பரிய இரு பெரிய அணிகளையும் தாண்டி, த.வெ.க., போன்ற புதிய கட்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவு அளித்திருக்கலாம் என்ற கணிப்பும் வலுவாக பேசப்படுகிறது. இது உண்மையாகி விட்டால், புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இப்போது அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டு எண்ணிக்கை தேதியை நோக்கி திக்... திக்... மனநிலையில் உள்ளன. ஒன்று மட்டும் நிச்சயம். 'ஸ்ட்ராங் ரூம்'களில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஓட்டுகள், மே 4 புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்புவது உறுதி...

Advertisement