எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்

5

ஓசூர் : ''டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு 'சீட்'வாங்கி கொடுத்தது. அதுவே கடைசி வரைக்கும் துாக்கி பிடிக்காது. காலையில் தான், 50 லட்சம் ரூபாய் திரட்டி கிருஷ்ணகிரிக்கு அனுப்பினேன்,'' என, ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி பேசியது, சர்ச்சையாக வெடித்துள்ளது.


ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவரான குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடுகிறார்.


இவர், சமீபத்தில் ஓசூரில் நடந்த காங்கிரசின் ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க கூட்டத்தில் பேசியதாவது:
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கே 28 'சீட்'டு தான் தருகிறார்கள். தமிழக காங்.,கில் மட்டும், 250 தலைவர்கள் உள்ளனர். அவர்களை மீறி, என் பக்கம் ஒரு 'சீட்' விழ வேண்டுமெனில், சுனாமி புயல் அடிச்சு வந்த மாதிரி; 'சீட்' வாங்குவது சாதாரண விஷயம் இல்லை.


28 'சீட்'டுகளில், 15 'சீட்'டுகளை எம்.எல்.ஏ.,க்களுக்கே கொடுக்க வேண்டுமென சொல்லிவிட்டனர். மீதம் உள்ளதை வாரிசுகளுக்கு கொஞ்சம் கொடுத்தாங்க. சத்தியமா என்கிட்ட பைசா இல்லை. தொழிற்சங்கம் சார்பில் எனக்கு நிதி திரட்டி கொடுக்கணும். டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு 'சீட்' வாங்கி கொடுத்தது. அதுவே கடைசி வரைக்கும் துாக்கி பிடிக்காது.
இப்படியாக அவர் பேசியதை, தேர்தல் பறக்கும் படையினர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அதை கூட அறியாத வேட்பாளர் குப்புசாமி, ''இன்று காலையில் தான், 50 லட்சம் ரூபாய் திரட்டி கிருஷ்ணகிரிக்கு அனுப்பினேன்,'' என்றார்.


ஒரு வேட்பாளர், 40 லட்சம் ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும் என்பது விதி. இந்நிலையில், 50 லட்சம் தயார் செய்து அனுப்பியதாக, குப்புசாமி கூறியதும், மேடையில் இருந்தவர்கள் சுதாரித்து, அவரை உஷார் படுத்தினர்.


அதன் பின், ''கட்சி நிர்வாகிகளுக்கு டீ, காபியாது வாங்கி தரணும். என் கண்ணில் ஆப்பரேஷன் செஞ்சிருக்குது,'' என ஏதேதோ பேசிய குப்புசாமி, 'டாபிக்'கை மாற்றினார்.இப்படி அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

Advertisement