வடிவமைப்பு மாறும்போது கட்டடத்தின் உறுதியை பார்ப்பது அவசியம்!

சொந்தமாக வீடு கட்டுவதற்கான பணிகளை திட்டமிடும் நிலையில், என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது, அதற்கான சரியான வழிகாட்டுதல்களை பெற வேண்டும்.

பொதுவாக வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்த பின், அதற்கான வரைபடம் தயாரிக்க சரியான தொழில்முறை வல்லுனரை தேர்வு செய்ய வேண்டும். சில இடங்ளில் கட்டுமான பொறியாளர், ஒப்பந்ததாரரிடமே இந்த பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

செலவு குறையும் என்ற எண்ணத்தில் இப்படி செய்தால், உங்கள் எண்ணப்படி கனவு இல்லம் அமைவது கேள்விக்குறியாகிவிடும். குறிப்பாக, ஆர்கிடெக்ட் எனப்படும் கட்டட வடிவமைப்பாளர் வாயிலாக மட்டுமே புதிய வீட்டுக்கான வரைபடங்களை தயாரிக்க வேண்டும்.

கட்டட அனுமதி பெறுவதற்கு ஏற்ற வகையில் வரைபடம் தயாரித்தால் போதும், வெளிப்புற தோற்றத்தை பின்னர் மாற்றிக்கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். இவ்வாறு நினைப்பவர்கள் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் அவசர கோலத்தில் செய்யும் மாற்றங்கள் கட்டடத்தின் உறுதிக்கு வேட்டு வைப்பதாக மாறிவிடும்.

புதிய வீட்டுக்கான வரைபடம் தயாரிப்பு பணியை அலட்சியப்படுத்தாமல் முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் வீட்டின் மொத்த பரப்பளவு, அறைகளின் அளவுகள் போன்ற விபரங்களை வரைபட நிலையிலேயே முடிவு செய்ய வேண்டும்.

பெரும்பாலான இடங்களில், வரைபடம் தயாரிக்கும் போதே, வீட்டின் வெளிப்புற தோற்றம் அதாவது எலிவேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தோற்றம் இறுதி செய்யப்படுகிறது. ஆனால், கட்டுமான பணிகள் முடிந்து எலிவேஷனுக்கான பணிகளை மேற்கொள்ளும் போது சில பிரச்னைகள் ஏற்படும்.

வரைபடத்தில் உள்ளது போன்று எலிவேஷன் தோற்றத்தை கான்கிரீட் கட்டுமானமாக மேற்கொள்ள முடியாது என்ற பிரச்னை ஏற்படும். இது போன்ற சூழலில், கான்கிரீட் கட்டுமானத்துக்கு மாறாக, வேறு பொருட்களை பயன்படுத்தி மக்கள் மாற்றங்களை செய்கின்றனர்.

இன்னும் சில இடங்களில் எலிவேஷன் தோற்றத்தை கடைசி நிமிடத்தில் மாற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு திடீர் மாற்றங்களை செய்யும் போது, அது கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.

சில சமயங்களில் எலிவேஷனில் மாற்று நடவடிக்கைகாக பயன்படுத்தப்படும் பொருட்கள் பயன்பாட்டு நிலையில் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற விஷயங்களில் உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

வீட்டின் எலிவேஷன் தோற்றத்தை கடைசி நிமிடத்தில் மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் கவனக்குறைவு, கட்டடத்தின் உறுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

Advertisement