அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் கோ.அரி தீவிர பிரசாரம்

திருத்தணி: “ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு மூன்று காஸ் சிலிண்டர்கள், 10,000 ரூபாய் ஊக்கத்தொகை பெறுவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து, அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்,” என, திருத்தணி வேட்பாளர் கோ.அரி பேசினார்.

திருத்தணி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் எம்.பி., கோ.அரி போட்டியிடுகிறார்.

இவர் நேற்று, பள்ளிப்பட்டு மத்திய ஒன்றியத்தில் கீச்சலம், கீழ்நெடுங்கல்,மேல்நெடுங்கல், ராமசமுத்திரம் உள்பட, 12 ஊராட்சிகளில், ஒன்றிய செயலர்கள் சீனிவாசன், கிருஷ்ணநாயுடு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் கோ.அரி, வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, கோ.அரி பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு நிறுத்தியுள்ளது. இத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தவும், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள், குடும்பத்தினருக்கு, 10,000 ரூபாய் ஊக்கத்தொகை, பொங்கல் பண்டிக்கு, 1,000 ரூபாய் வழங்கப்படும்.

இதுதவிர, குலவிளக்கு திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய், முதியோர் உதவித்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குறிப்பாக, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றதும், மீண்டும் கொண்டு வரப்படும்.

மேலும், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, வரும் 23ம் தேதி நடைபெறும் தேர்தலில், மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும்.

திருத்தணி தொகுதியில், ஆர்.கே.பேட்டை - பள்ளிப்பட்டை மையமாக கொண்டு, அரசு மகளிர் கல்லுாரி கொண்டு வருவேன். இதற்கு நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement