ஸ்டாலின் படம் பொறித்த கூப்பன் கீ செயின், ஸ்டிக்கர்கள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுாரில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில், ஸ்டாலின் படம் பொறித்த துண்டு அறிக்கை, கீ செயின், பரிசு கூப்பன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில், வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பூந்தமல்லியில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அதில், தி.மு.க., அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு அறிக்கைகள், சிறிய காலண்டர்கள், கீ செயின்கள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றால் 8,000 ரூபாய் டோக்கன் வழங்கப்படும் என்ற மாதிரி கூப்பன் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருவள்ளூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க., சார்பில் இதுபோன்ற துண்டு அறிக்கையை அனுப்புவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

உண்மை நகல் பெற்றதும், அது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement