நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு

வால்பாறை: வால்பாறை நகரில், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்துக்கு செல்லும் நடைபாதையில், கடந்த சில நாட்களாக கட்டுமான பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடந்து செல்லும் பாதையின் இருபுறமும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், நடந்து செல்ல இடையூறு ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகம் மற்றும் கடைகளுக்கு மக்கள் நடந்து செல்ல வசதியாக, நகராட்சி சார்பில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளில் தனியார் சார்பில், கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், நடந்து செல்வோருக்கு இடையூறு ஏற்படுகிறது.

நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement