யானை நடமாட்டத்தால் தொட்டபெட்டா காட்சி முனை மூடல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் யானை நுழைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டதால் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.



நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணியர் அரசு தாவரவியல் பூங்கா படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு களிப்பதுடன், தொட்டபெட்டா காட்சி முனை அழகை காண தவறுவது இல்லை.



வனத்துறைக்கு சொந்தமான தொட்டபெட்டா சிகரம் பகுதியில், வனவிலங்குகளில் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், யானை நடமாட்டத்தை கண்காணிக்க, வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி, கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று தொட்டபெட்டா காட்சி முனை செல்லும் சாலையில் ஒற்றை யானை நுழைந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது.



இதனால், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி, தொட்டபெட்டா காட்சி முனை தற்காலிகமாக மூடப்பட்டது.

விடுமுறை நாளான ஞாயிறன்று கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணியர் தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காட்சி முனை வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement