மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு

மதுரை: ''மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்., அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்யாமல் மறுப்பு தெரிவித்ததாக தி.மு.க.,வினர் பொய்ச்செய்தி பரப்புகின்றனர்'' என மதுரையில் மத்திய தொழில்துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பேசினார்.

தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஜெகதீசன், நிர்வாகிகள் சுந்தரலிங்கம், ரமேஷ், ஸ்ரீதர், தனுஷ்கோடி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமஸ்ரீநிவாசன் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பேசியதாவது: தமிழக அரசு வணிகத்தையும் தொழில்களையும் புறக்கணித்துள்ளது. தி.மு.க.,வின் முன்னுரிமை பட்டியல் ஊழலுக்கு தான். அவர்களுக்கு தெரிந்தது கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன்தான். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி என தி.மு.க., வாரிசுகளின் எண்ணிக்கையைப் போல அவர்களின் ஊழலும் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் கூட ரூ.200 கோடி வரை ஊழல் செய்துள்ளனர்.

நகர்ப்புற மேம்பாட்டு மையத்தின் கீழ் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்., அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்யாமல் மறுப்பு தெரிவித்ததாக பொய்ச்செய்தி பரப்புகின்றனர். இதேபோல மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியிலும் நிலத்தை முழுமையாக கையகப்படுத்தித் தரவில்லை. நிலமின்றி காற்றில் ரன்வேயை உருவாக்க முடியுமா. மத்திய அரசு ரன்வேயை நீட்டிக்க தயாராக இருந்தும், இன்னமும் 'ப்ராசஸ்' என்ற முறையில் தான் தமிழகம் உள்ளது.

தமிழின் தொன்மைக்கும் கலாசாரத்திற்கும் மதிப்பளிக்காமல் இழிவுபடுத்திய உதயநிதி, எப்போதுமே முதல்வராக வரக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை ஏற்படுத்திய மோசமான சூழலை மறந்து விடக்கூடாது. ஏப்.,23 தமிழகத்தின் முக்கியமான நாள். மாற்றம் வேண்டும் என்பதை வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

மாற்றத்தை விரும்பும் தமிழ்நாடு முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பீயூஷ் கோயல் கூறியதாவது: ஸ்டாலின் ஆட்சியில் நிலம், மணல் மாபியாக்கள்தான் தமிழகத்தை ஆளுகின்றனர். தி.மு.க., அரசு வெளியேறவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தின் அமையும். அந்த ஆட்சி தமிழகம் மற்றும் தமிழக மக்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றி அமைக்கும். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது என்றார்.

Advertisement