சாலையோர பள்ளத்தில் பாய்ந்து ஆம்னி பஸ் விபத்து; 15 பேர் காயம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம டைந்தனர்.

சென்னையில் இருந்து கோயம்புத்துார் செல்லும் இன்டர்சிட்டி ஸ்மார்ட் என்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டில் இருந்து பறப்பட்டது. பஸ்சில் 32 பேர் பயணித்தனர். பஸ்சை, கோயம்புத்துார் அடுத்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில்வேலன், 28; டிரைவர் ஓட்டிச் சென்றார்.

ஆம்னி பஸ் நேற்று காலை 4.15 மணி அளவில் உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் உறக்கத்தில் இருந்த பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், போலீசார் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

விபத்தில் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகபாண்டி, 54; அவிநாசி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 34; கோயம்புத்துார் குணசேகர், 37; திண்டிவனம் ரமேஷ், 50; கோயம்புத்துார் ரகனா, 46; மகேஸ்வரி, 88; அனுப்ரியா, 27; நந்தகோபால், 53; உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமுற்றவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement