கண்களில் கைது பயம்!

'தோல்வி என்ற வார்த்தையே நம் அகராதியில் இருக்கக் கூடாது...' என, தன் கட்சி நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக கூறி வருகிறார், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்று, முதல்வராக பதவியேற்றார்; சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர் வரிசையில் அமர வேண்டியதாயிற்று.

அடுத்த ஐந்து ஆண்டுகளும், சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து, இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையிலும் அடைத்தார், ஜெகன். இதில் இருந்து வெளியில் வருவதற்குள், சந்திரபாபு நாயுடுக்கு விழி பிதுங்கி விட்டது.

இதை தொடர்ந்து, 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று, தற்போது முதல்வராக உள்ளார். அடுத்ததாக, 2029ல் ஆந்திராவில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், தோல்வி அடைந்தால், மீண்டும் வழக்கு, கைது போன்ற நடவடிக்கைகள் தன் மீது பாயும் என்பதை சந்திரபாபு நாயுடு தெரிந்து வைத்துள்ளார்.

இதையடுத்து, ஆந்திரா முழுதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று, தன் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன் தேநீர் அருந்தி, கலந்துரையாடி, தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு, 'சந்திர பாபுவுடன் தேநீர் அருந்துவோம்' என, பெயரிட்டுள்ளார்.

ஜெகன்மோகன் கட்சியினரோ, 'கைது பயம், சந்திரபாபு நாயுடு கண்களில் தெரிகிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

Advertisement