பட்டி கட்டி ஓட்டு கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,!

2

த மிழ் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிய நண்பர்கள் மத்தியில், ''இந்தப் பட்டியை விட்டுட்டு, தான் போட்டியிடும் பகுதியில் பட்டி அமைக்க கிளம்பிட்டாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''என்னது பா பட்டி...'' என கேட்டார், அன்வர்பாய்.

''வாக்காளர்களை அடைத்து வைக்க, கட்சிக்காரங்க பட்டி தயார் பண்ணினதா பத்திரிகையில போட்டோல்லாம் போட்டாங்களேங்க... அதைச் சொல்றேன்... மேற்கு மண்டலத்துக்கு, ஆளுங்கட்சி சார்பா, மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி தான் பொறுப்பு... பட்டி கட்டுற வேலையெல்லாம் இவர் கீழே வேலை பார்க்கிறவங்க, 'பக்கா'வா பண்ணுவாங்க...

''திருப்பூர் தெற்கு தொகுதியில, தற்போதைய எம்.எல்.ஏ., செல்வராஜ், தனக்கு மீண்டும் அங்கேயே வாய்ப்பு கிடைக்கும்ன்னு நினைச்சு, அங்கே, பட்டி கட்டினாருங்க... ஆனால, பல்லடம் தொகுதியில போட்டியிட வாய்ப்பு கிடைச்சிருக்கு... விடுவாரா... அங்கேயும் பட்டி கட்ட இடம் தேடிட்டு இருக்காருங்க... திருப்பூர்ல கட்டின பட்டியும் அப்படியே தான் இருக்கு... இன்னும் எடுக்கலீங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''டுபாக்கூர்கள் கூட்டம் மொய்க்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போட்டியிடுறாரு... இவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில், சரண்யா போட்டியிடுறாங்க பா...

''இவங்க பிரபலம் இல்லாதவங்க என்பதால, சிவசங்கரின் வெற்றி உறுதின்னு அவரது ஆதரவாளர்கள் உற்சாகமா இருக்காங்க... இருந்தாலும், ஊர் ஊரா சிவசங்கர் பிரசாரம் பண்ணிட்டு தான் இருக்காரு பா...

''இவரது பிரசாரத்துக்கு கட்சியினரை விட, 'டுபாக்கூர்' பத்திரிகையாளர்கள் தான் அதிகம் கூடுறாங்க... அமைச்சரின் பி.ஏ., மகேந்திரனிடம் போய், தலைக்கு, 1,000 ரூபாயை வாங்கிட்டு போறாங்க... இன்னும் சில டுபாக்கூர்கள், தங்களது நண்பர்கள், உறவினர்கள் சிலரையும் கூட்டிட்டு வந்து, பத்திரிகையாளர்கள்னு மகேந்திரன்கிட்ட சொல்லி, பணம் வாங்கிட்டு போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''பண பட்டுவாடாவுக்கு உதவிய எஸ்.ஐ., கதை தெரியுமா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த தொகுதியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

''விருதுநகர் மாவட்டத்தின் ஒரு தொகுதியில், மீசைக்கார அமைச்சர் போட்டியிடறார்... வாக்காளர்களுக்கு குடுக்கறதுக்காக, 8 கோடி ரூபாயை, இவரது மகன் சமீபத்துல கட்சி நிர்வாகிகளுக்கு பிரிச்சு குடுத்திருக்கார் ஓய்...

''அமைச்சரின் உறவினரான தனிப்பிரிவு எஸ்.ஐ., ஒருத்தர், எந்த இடத்தில் பறக்கும் படையினர் நிக்கறா, எந்த வழியா தொகுதிக்குள்ள பணத்தை எடுத்துண்டு போகலாம்னு வரைபடம் போடாத குறையா, வழித்தடம் போட்டு குடுத்திருக்கார்... தேர்தல் இடமாறுதல்ல, ஆளுங்கட்சி ஆதரவுல தப்பிய இந்த எஸ்.ஐ., இப்ப அவாளுக்கு நன்னா ஒத்தாசை பண்றார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''ஓவி ரெட்டி, வாரும்... ராமசந்திரன் சார் இப்ப தான் கிளம்பினாரு வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி பேச்சு கொடுக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Advertisement