பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

பெங்களூரு: 'அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்,' என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாதவிடாய் விடுப்பு கொள்கையை அறிமுகம் செய்தது. 18 முதல் 52 வயது வரையிலான பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 விடுப்புகள் ஊதியத்துடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுதும் பெண்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது.

மனுக்கள் அதே சமயம், இந்த உத்தரவை எதிர்த்து, பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம், மானேஜ்மென்ட் ஆப் அவிராடா ஏ.எப்.எல்., கனெக்டிவிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட் உள்ளிட்ட அமைப்புகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இதே போன்று, அகில இந்திய மத்திய தொழிற்சங்கங்களின் கவுன்சில், அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் போன்ற அமைப்புகளும், 15 பெண் வக்கீல்களும், அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும், பணிபுரியும் பெண்கள் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களின் மீதா ன விசாரணை நேற்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி நாகபிரசன்னா வழங்கிய தீர்ப்பு:

பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்புக்கான கோரிக்கை என்பது, சிறப்புரிமைக்கான வேண்டுகோள் அல்ல; மாறாக, பெண்கள் வாழும் சூழல்களில் கண்ணியம், நியாயம் மற்றும் மனிதாபிமானப் புரிதலை வலியுறுத்துவதாகும்.

வாழ்வுரிமை சட்டம் ஆண், பெண் என இருவரும் சமமே. இருப்பினும், பெண்கள் உயிரியியல் ரீதியாக வேறுபட்டவர்கள். இதை அங்கீகரிப்பதே சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தை தரும். மாதவிடாய் விடுமுறை பெறுவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதியாகும்.

இந்திய அரசியலமைப்பின் 14வது பிரிவை மேலோட்டமாகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் எழும் தவறான அச்சங்களால் அரசு பின்வாங்க கூடாது. இவ்விஷயத்தை நீதிமன்றம் கவனிக்கிறது.

அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement