வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 4 பேர் கைது

22

மீஞ்சூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, வீட்டு மாடியில் உள்ள அறையில் படித்துக்கொண்டு இருந்த கல்லுாரி மாணவியை கஞ்சா போதை கும்பல் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

மீஞ்சூர் பகுதியை சேர்ந்த இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரி ஒன்றில், இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவு, 10:30 மணியளவில் மாடி வீட்டில் உள்ள அறை ஒன்றில் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருந்தார். தரை தளத்தில் உள்ள வீட்டில் கல்லுாரி மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இருந்தனர்.

திடீரென மாடி வீட்டு அறையில் இருந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மாணவி இருந்த இடத்திற்கு ஓடினார்.

அங்கு ரத்த வெள்ளத்தில் மாணவி துடியாய் துடித்தார். உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எட்டு இடங்களில் கொடூரமான வெட்டுக்காயங்கள் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்ற மர்மநபரை மாணவியின் உறவினர்கள் நையப் புடைத்து விசாரித்தனர். அப்போது அவன் மித மிஞ்சிய கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவன் மாணவியின் வீட்டருகே உள்ள மற்றொரு தெருவைச் சேர்ந்த ரோலக்ஸ் என்கிற டில்லிபாபு, 24, என்பது தெரியவந்தது. அவன் மீது, ஏற்கனவே கார் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

டில்லிபாபு உள்ளிட்ட நான்கு பேர் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். ஒருவன் மட்டும் வீட்டின் கீழ் தளத்தில் ஆட்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்தபடி நின்றுள்ளான். மற்ற மூன்று பேர் மாணவியின் வீட்டின் பக்கப்பகுதியில் இருந்து ஏறி குதித்து மாடிப்பகுதிக்கு சென்று உள்ளனர்.

அங்கு மாணவியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். மாணவி திடீரென கூச்சலிட்டதால் மூன்று பேரும் அம்மாணவியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

நேற்று இரவு அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் மீஞ்சூர் அருகே, வல்லுாரைச் சேர்ந்த சித்திக், 19, லோகேஷ், 22, முத்தமிழ்செல்வன், 24 என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


@block_G@

அரசியல் கட்சிகள் கண்டனம்


பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர்: கஞ்சா போதை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி ஆகியவைதான், தி.மு.க., ஆட்சியின் அவலம். படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் தி.மு.க., மாடல்.

அன்புமணி, பா.ம.க., தலைவர்: தி.மு.க., ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம். தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான், பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

அண்ணாமலை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்: ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதை பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நம் குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகி இருக்கிறது.

தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர் : சென்னையில் துவங்கி, கடைக்கோடி கிராமங்கள் வரை, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, புரையோடி போயிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால், தங்களின் சொந்த வீட்டில் கூட, பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.block_G

Advertisement