பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

பண்டிப்பூர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் மாதிரி படம். (அடுத்த படம்) முத்தங்கா சோதனை சாவடி - குண்டுலுபேட் மாத்துார் சோதனை சாவடி வரையிலான 19.7 கி.மீ., வரையிலான வரைபடம். (கடைசி படம்) தடை செய்யப்பட்ட சாலை பகுதி.



- நமது சிறப்பு நிருபர் -: கோழிக்கோடு - கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலை என்பது வெறும் போக்குவரத்துப் பாதை மட்டுமல்ல; அது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான மிக முக்கியமான இணைப்புப் பாலமாகும். இது தேசிய நெடுஞ்சாலை என்.எச்.,766 எனப்படுகிறது. இந்த சாலையில் பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதி (Core Zone) வருகிறது.

இந்தச் சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி, வன விலங்குகள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் வகையில், கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முத்தங்கா சோதனைச் சாவடியில் இருந்து கர்நாடக மாநிலத்தின் குண்டுலுபேட் பகுதியில் அமைந்துள்ள மாத்துார் சோதனைச் சாவடி வரையிலான, 19.7 கி.மீ., சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

* 19 கி.மீ., பகுதி

இந்த 19 கி.மீ., பகுதி புலிகள் மற்றும் யானைகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், பகல் நேரத்திலும் இங்கு வாகனங்களை நிறுத்தவோ அல்லது பயணியர் இறங்கவோ அனுமதி கிடையாது.

ஆரம்பத்தில் தடையை நீக்க கடுமையாக எதிர்த்த கர்நாடக அரசு, கடந்த லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா வெற்றி பெற்ற பின், 2025 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சில எதிர்ப்பு மனுக்களை (Counter-affidavits) திரும்பப் பெற்றது. இது தடையை நீக்குவதற்கான சமிக்ஞையாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் கருதப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கேரள அரசு கூறி வருகிறது. இந்தத் தடையை நீக்கும்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வயநாடு எம்.பி., பிரியங்கா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரவு நேர போக்குவரத்துத் தடைக்குத் தீர்வாக, இந்தச் சாலையில் வனப்பகுதியில் 4 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைப்பதன் மூலம் 24 மணி நேரப் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு, கடந்த ஆண்டின் இறுதியில் முன்மொழிந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

* சுரங்கப்பாதை

இதையடுத்து, வனப்பகுதியில் சுரங்கப்பாதை (Tunnel Road) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கூட்டுப் பணிக்குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அமைத்துள்ளதாக பிரியங்காவுக்கு எழுதிய கடிதத்தில் சில மாதங்களுக்கு முன், நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இந்த ஆய்வுக் குழுவில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

சாலை போக்குவரத்துடன் ரயில் போக்குவரத்துக்கும் சேர்த்து, சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சுரங்கப்பாதை சாலை மற்றும் ரயில்வே ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வகையில் அமையும் பட்சத்தில், வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் 24 மணி நேரப் போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என மத்திய அரசு நம்புகிறது.

எத்தனை கிலோமீட்டர் துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும் தடையை உறுதி செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 2010ல் கேரள அரசு தாக்கல் செய்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மத்திய அரசின் சுரங்கப்பாதை திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*பாதுகாவலர்கள் விமர்சனம்

சுரங்கப்பாதை அமைப்பது காட்டின் அமைதியைக் குலைக்கும் என்றும், இது கேரள சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு செய்யப்படும் அரசியல் நகர்வு என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள் விமர்சிக்கின்றனர்.

'யானைகள் மற்றும் புலிகளின் முக்கிய வலசைப் பாதையான இந்தப் பகுதியில் மேம்பாலங்களோ, சுரங்கப்பாதையோ அமைப்பது காட்டைத் துண்டாடும்' எனக்கூறி கடந்த மார்ச்சில் மைசூரு, சாம்ராஜ்நகரில் பெரிய அளவிலான போராட்டங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னெடுத்துள்ளனர்.



... பாக்ஸ்... - 1

* வர்த்தகர்களும் வருத்தமும்

கோழிக்கோடு - கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலை என்பது வெறும் போக்குவரத்துப் பாதை மட்டுமல்ல, அது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான மிக முக்கியமான இணைப்புப் பாலமாகும். மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவில் உயர் கல்வி படிக்கும் வயநாடு பகுதி மாணவர்களும் அவசர சிகிச்சைகளுக்காக மைசூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வரவும் கேரள மக்கள் இந்தச் சாலையையே நம்பியுள்ளனர்.

* குறுகிய பாதை

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான மைசூரையும், வயநாட்டையும் இணைக்கும் மிகக் குறுகிய பாதை இதுவாகும்.

இந்தச் சாலை இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஒன்றான நீலகிரி உயிரியல் பூங்காவின் (Nilgiri Biosphere Reserve) மையப்பகுதி வழியாகச் செல்கிறது.

வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் வழியே செல்வதால், இயற்கை எழிலை ரசிக்கவும், வனவிலங்குகளைக் காணவும் இந்தச் சாலையை பயணியர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்திற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் பெருமளவில் கர்நாடகாவில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன.

அதேபோல், வயநாட்டின் முக்கிய விளைபொருட்களான இஞ்சி, மிளகு, காபி உள்ளிட்ட விளைபொருள்களும் கர்நாடக சந்தைகளுக்குச் செல்ல இதுவே பிரதான வழி.

* போக்குவரத்து நெரிசல்

இந்தச் சாலை வழியாக தினமும் பகல் நேரத்தில் மட்டும் 2,500 முதல் 3,000 வாகனங்கள் செல்கின்றன. இவற்றில் 700 - 900 கனரக வாகனங்கள், மினி லாரிகள். இரவு நேரத் தடையின் காரணமாக, இந்த வாகனங்கள் அனைத்தும் பகல் நேரத்திலேயே விரைந்து செல்ல முயல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வயநாடு மாவட்டத்தின் விவசாயப் பொருளாதாரத்தில் இச்சாலை 60 முதல் 70 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. வயநாட்டிலிருந்து இஞ்சி, மிளகு, காபி, வாழை உள்ளிட்டவை கர்நாடகாவிற்கு லாரிகளில் அனுப்பப்படுகின்றன. வயநாட்டின் மொத்த இஞ்சி விளைச்சலில் 45 சதவீதமும், 16 சதவீத மிளகும் இச்சாலை வழியாகவே வர்த்தகம் செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

அதே வேளையில் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்குத் தேவையான தக்காளி, வெங்காயம், தானியங்கள், மளிகைப் பொருள்கள் இச்சாலை வழியாக வருகின்றன.

பல்வேறு வர்த்தக சங்கங்களின் தரவுகளின் அடிப்படையில், இந்தச் சாலை வழியாக ஒரு நாளைக்கு சராசரியாக 65 கோடி முதல் 85 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுவதாக தோராயமாக மதிப்பிடப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் இது 100 கோடி ரூபாயைத் தொடுகிறது. இதில் விவசாயப் பொருட்கள் மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்கள், எரிபொருள், மின்னணு சாதனங்களும் அடங்கும்.

* மாற்று பாதை

இரவு நேரப் போக்குவரத்துத் தடையால் மாற்றுப் பாதையான மானந்தவாடி - குட்டா - கோணிகொப்பல் சாலை வழியாகச் செல்லும்போது 35 - 40 கி.மீ., கூடுதல் துாரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இது பயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக ஒரு லாரிக்கு 3,000 முதல் 5,000 ரூபாய் வரை வர்த்தகர்களுக்கு கூடுதல் செலவு ஆகிறது. இதனாலேயே என்.எச்., 766 மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில் ஆண்டுக்கு 150 கோடி முதல் 180 கோடி ரூபாய் வரை, லாரி உரிமையாளர்களுக்குக் கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காய்கறிகள், பால் போன்ற விரைவில் கெட்டுப்போகும் பொருட்கள் சந்தைக்குச் செல்லத் தாமதமாவதால் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேலான மறைமுக இழப்பு ஏற்படுவதாக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சுட்டிக் காட்டியுள்ளது.

*******

பாக்ஸ் - 2

தடை வந்த வரலாறு

பண்டிப்பூர் வனப்பகுதியில் வாகனங்களில் சிக்கி வன விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கும்படி சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டருக்கு 2009 ஆகஸ்ட் மாதத்தில் பண்டிப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் பரிந்துரை செய்தார். குறிப்பிட்ட 19.7 கி.மீ., துார சாலைப் பகுதியில் 30 நிமிட இடைவெளியில் 44 வாகனங்கள் செல்வது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இரவு போக்குவரத்து என்பது விலங்குகளின் இனப்பெருக்கம் மற்றும் உயிரியலை பாதிக்கும் என்றும், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை சீர்குலைத்து, மனித வாழ்விடங்களுக்கு வழிதவறச் செய்யும் என்றும் தன் அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.

இதை ஏற்று, 19.7 கி.மீ., சாலைப் பகுதியில் மட்டும் இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதித்து, 2009ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதன் முறையாக சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்தத் தடையானது, இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இருக்கும். இருமாநில மக்களின் எதிர்ப்பால் ஜூன் 10ம் தேதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முறையீட்டை விசாரித்து, தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2009 ஜூலை 27ம் தேதி முதல், இந்தச் சாலையில் இரவுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததுடன், மாற்றுச்சாலையை மேம்படுத்துவதுடன், என்.எச்., 766ல் நிரந்தரமாக போக்குவரத்துக்குத் தடை விதிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலையும் மத்திய அரசும் கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இரவுத் தடை வேளையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தலா 8 பேருந்துகள் என, மொத்தம் 16 பேருந்துகளும் ஆம்புலன்ஸ்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

********

பாக்ஸ் - 3

சுற்றுச்சூழல் நெருக்கடி பகுதி

முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை உள்ளடக்கிய நீலகிரி உயிரியல் பூங்கா (தமிழ்நாடு), வயநாடு வனவிலங்கு சரணாலயம் (கேரளம்), நாகரஹொளே தேசிய பூங்கா (கர்நாடகா) ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வனப் பகுதிகளை உள்ளடக்கியது தான் பண்டிப்பூர் புலிகள் சரணாலயம்.

கர்நாடகாவில் தற்போது பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தின் எல்லை, 912.04 சதுர கி.மீ., ஆக உள்ளது. தமிழகம், கேரளா ஆகிய அண்டை மாநிலங்களின் வனப்பகுதியையும் சேர்த்துக் கணக்கிட்டால் 5,520 ச.கி.மீ., ஆக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டிப்பூர் வனப்பகுதியின் முக்கியத்துவத்தை 1941க்கு முன்பே மத்திய அரசு உணர்ந்து கொண்டது. இங்கு இருக்கும் பல்லுயிர் சங்கிலியை பாதுகாக்க அதே ஆண்டின் பிப்ரவரி 19ல் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மத்திய அரசு அறிவித்தது.

புலிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பண்டிப்பூர் புலிகள் பாதுகாப்பு பகுதியாக 1973ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சில காப்புக்காடுகள் இணைக்கப்பட்டன. 1984ல் தேசிய பூங்காவானது. பின், 1985ல் பண்டிப்பூர் சரணாலயமாக பெயர் சூட்டப்பட்டது.

யானை உட்பட பல வகையான வனவிலங்குகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தங்களின் தேவைக்காக இரவு நேரத்தில் இடம்பெயர்ந்து மாநிலங்களை கடக்கின்றன.

பண்டிப்பூரில் 140 புலிகள், 1,600 யானைகள் மற்றும் 25,000 புள்ளி மான்கள் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக மிக நெருக்கடியான பகுதியாக (Ecological Hotspot) இந்தப் பகுதி கருதப்படுகிறது.

*********



பாக்ஸ் - 4

வாகனங்களுக்கான சாலை... வனவிலங்குகளின் கல்லறையா?



பண்டிப்பூர் புலிகள் சரணாலயம் வெறும் 1,456 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட பசுமையான பகுதி மட்டும் அல்ல - இது ஓர் இயற்கையின் வி.ஐ.பி., மண்டலம். இங்கே தங்களுக்கான ஓடுபாதையில் புலிகள் வேகமாக ஓடுகின்றன, சாகசம் செய்கின்றன. யானைகள் உற்சாகமாக உலா வருகின்றன, 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் சிம்பொனி நடத்துகின்றன.

இங்கே மொபைல் போன் சிக்னல் இல்லை; அதனால் வைபை இல்லை. வேறு வழியும் இல்லை. உங்கள் பயணத்தின்போது, இந்தக் காட்டைத்தான் ரசித்தாக வேண்டும். ஆனால் இந்தக் காட்டையும் வன விலங்குகளையும் ரசிக்கக்கூட நேரமில்லாமல், 2004 - 2009க்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வேகமாகச் சென்ற வாகனங்களால் பண்டிப்பூர் சாலை, வனவிலங்குகளின் கல்லறைத் தோட்டமாக மாறியது.

ஆனால் இப்போது, சிலர் வனவிலங்குகளுக்கு ஆதரவாகக் கொடுத்த குரலை அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி, இரவு நேர தடையை நீக்க வற்புறுத்துகின்றனர்.

வன விலங்குகளின் வீட்டுக்குள் நுழைந்து செல்வதையே தங்கள் உரிமையாகக் கூறிக் கொள்ளும் சிலருக்கு, சில மணி நேரம் சுற்றிச் செல்வதற்கு மனமில்லை. ஆசிய யானைகள், புலிகளின் மிக முக்கியமான வலசைப் பாதையாக (Migration path) இது இருப்பதால், வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இன்னும் சிலருக்கோ அது, 'ஈகோ' பிரச்னையாக உருவெடுத்து விட்டதாக தோன்றுகிறது. இது, விலங்குகளின் வாழ்விடத்தையே சவக்குழிகளாக மாற்றுவதற்கு இட்டுச்செல்லும். இது மிகவும் ஆபத்தானது என்பதை அவர்கள் உணரவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கும், வனவிலங்குகளின் வாழ்வுரிமைக்கும் இடையிலான போராட்டமாக உருவெடுத்து நிற்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக மனிதர்கள் போராடி வருகின்றனர். வன விலங்குகளுக்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடுகின்றனர்.

பண்டிப்பூரைக் காப்பாற்றுங்கள் - ஏனென்றால் வன விலங்குகளால் தங்களுக்காக குரல் கொடுக்க முடியாது.

******

பாக்ஸ் - 5

குறைந்தன விபத்துகள்

தடைக்கு முன்பு 2004 - 2007 காலப்பகுதியில் வாகனங்கள் மோதியதில் 222 வனவிலங்குகள் உயிரிழந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தடைக்கு பின், 2021 முதல் 2025 தொடக்கம் வரையிலான காலகட்டத்தில் என்.எச்., 766 மற்றும் என்.எச்., 181 பகுதிகளில் வாகனங்கள் மோதி 30 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

==============

ஆண்டு உயிரிழந்த விலங்கு எண்ணிக்கை

2021 2

2022 9

2023 4

2024 13

2025 2

(ஏப்ரல் வரை)

***

- நமது சிறப்பு நிருபர் -: கோழிக்கோடு - கொள்ளேகால் தேசிய நெடுஞ்சாலை என்பது வெறும் போக்குவரத்துப் பாதை மட்டுமல்ல; அது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான சமூக, பொருளாதார மற்றும் புவியியல் ரீதியான மிக முக்கியமான இணைப்புப் பாலமாகும். இது தேசிய நெடுஞ்சாலை என்.எச்.,766 எனப்படுகிறது. இந்த சாலையில் பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தின் மையப்பகுதி (Core Zone) வருகிறது.

இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி, வன விலங்குகள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் வகையில், கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முத்தங்கா சோதனைச்சாவடியில் இருந்து கர்நாடக மாநிலத்தின் குண்டுலுபேட் பகுதியில் அமைந்துள்ள மாத்துார் சோதனைச்சாவடி வரையிலான, 19.7 கி.மீ., சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

19 கி.மீ., பகுதி இந்த 19 கி.மீ., பகுதி புலிகள் மற்றும் யானைகளின் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், பகல் நேரத்திலும் இங்கு வாகனங்களை நிறுத்தவோ அல்லது பயணியர் இறங்கவோ அனுமதி கிடையாது.

ஆரம்பத்தில் தடை யை நீக்க கடுமையாக எதிர்த்த கர்நாடக அரசு, கடந்த லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா வெற்றி பெற்ற பின், 2025 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சில எதிர்ப்பு மனுக்களை (Counter-affidavits) திரும்பப் பெற்றது. இது தடையை நீக்குவதற்கான சமிக்ஞையாக சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் இடையே கருதப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு முதல் அமலில் உள்ள இந்தத் தடையால் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கேரள அரசு கூறி வருகிறது. இந்த தடையை நீக்கும்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வயநாடு எம்.பி., பிரியங்கா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரவு நேர போக்குவரத்து தடைக்குத் தீர்வாக, இந்த சாலையில் வனப்பகுதியில் 4 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைப்பதன் மூலம் 24 மணி நேர போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு, கடந்த ஆண்டின் இறுதியில் முன்மொழிந்தது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுரங்கப்பாதை இதையடுத்து, வனப்பகுதியில் சுரங்கப்பாதை (Tunnel Road) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு கூட்டுப் பணிக்குழுவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அமைத்துள்ளதாக பிரியங்காவுக்கு எழுதிய கடிதத்தில் சில மாதங்களுக்கு முன், நிதின் கட்கரி கூறியிருந்தார்.

இந்த ஆய்வு குழுவில் சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

சாலை போக்குவரத்துடன் ரயில் போக்குவரத்துக்கும் சேர்த்து, சுரங்கப்பாதை அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சுரங்கப்பாதை சாலை மற்றும் ரயில்வே ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வகையில் அமையும் பட்சத்தில், வனவிலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் 24 மணி நேர போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என, மத்திய அரசு நம்புகிறது.

எத்தனை கிலோமீட்டர் துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனினும் தடையை உறுதி செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 2010ல் கேரள அரசு தாக்கல் செய்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மத்திய அரசின் சுரங்கப்பாதை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாவலர்கள் விமர்சனம் சுரங்கப்பாதை அமைப்பது காட்டின் அமைதியைக் குலைக்கும் என்றும், இது கேரள சட்டப்பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு செய்யப்படும் அரசியல் நகர்வு என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பா துகாவலர்கள் விமர்சிக்கின்றனர்.

'யானைகள் மற்றும் புலிகளின் மு க்கிய வலசைப் பாதையான இந்த பகுதியில் மேம்பாலங்களோ, சுரங்கப்பாதையோ அமைப்பது காட்டைத் துண்டாடும்' எனக்கூறி கடந்த மார்ச்சில் மைசூரு, சாம்ராஜ்நகரில் பெரிய அளவிலான போராட்டங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னெடுத் துள்ளனர்.

Advertisement