பிரசாரத்துக்கு வராத ராகுலை ஸ்டாலினால் மிரட்ட முடியுமா?: குஷ்பு கேள்வி

12

மதுரை: ''பிரதமர் மோடியை பார்த்து மிரட்டல் விடுக்கும் முதல்வர் ஸ்டாலின், பிரசாரத்திற்கு வருமாறு ராகுலை மிரட்டுவாரா,'' என தமிழக பா.ஜ., துணைத் தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பினார்.

மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மத்திய அரசை எதிர்த்து கேட்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். உலக தலைவர்கள் பிரதமர் மோடியை பாராட்டுகின்றனர்.

மோடியிடம் பேசிவிட்டு தான் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார். நிலைமை அப்படி இருக்க, உலக தலைவர்களுக்கு தெரியாதது, ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் தெரிந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தான், நாங்கள் வைத்ததே சட்டம் என்ற நிலை உள்ளது.

தமிழக வளர்ச்சி பற்றி வெள்ளை அறிக்கை கேட்டால், எங்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனரே தவிர, வெள்ளை அறிக்கையை தரவில்லை.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ வெளியிடுகிறார். ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது; நாட்டின் பிரதமரை பார்த்து கேட்கும் கேள்வியா இது.

பிரதமரை மிரட்டி பேசும் முதல்வர் ஸ்டாலின், 'காங்கிரசுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கி இருக்கிறோம். நீங்கள் ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை' என ராகுலை மிரட்ட முடியுமா; அதற்கு, ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement