கிராமங்களில் தரமான மருத்துவ வசதி கும்மிடி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
கும்மிடிப்பூண்டி: “கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் தரமான மருத்துவ வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் உறுதியளித்தார்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர், நேற்று முக்கரம்பாக்கம், நெல்வாய், கொள்ளானுார், தேர்வாய், கரடிபுத்துார், கண்ணன்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சிவகுமார் தலைமையில் நடந்த பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் சுதாகர் பேசியதாவது:
கும்மிடிப்பூண்டி, தேர்வாய்கண்டிகை ஆகிய சிப்காட் வளாகங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண் - பெண் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.
சிப்காட் வளாகங்களுடன் கிராம பகுதிகளை இணைக்கும் வகையில் சிற்றுந்து வசதி ஏற்படுத்தப்படும். தனியார் தொழிற்சாலைகளின் சி.எஸ்.ஆர்., நிதி பங்களிப்புடன், கிராம பகுதி மக்களின் நலன் கருதி, 24 மணி நேரமும் தரமான மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நிலுவையில் உள்ள பட்டா தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.