மத்திய அரசு நகர்ப்புற கட்டமைப்பு நிதி; மதுரை, கோவைக்கு கிடைக்க வாய்ப்பு

1

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள நகர்ப்புற கட்டமைப்பு எனப்படும், சவால் நிதியை பெற, தமிழகத்தில் மதுரை, கோவை நகரங்கள் தகுதி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுதும் நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, 'அம்ரூத்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது மட்டுமல்லாது, 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில் சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'நகர்ப்புற கட்டமைப்பு நிதி' என்ற பெயரில், புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இரண்டாம் நிலை நகரங்கள் தங்களுக்குள் போட்டி போட்டு, திட்டங்களை உருவாக்க வேண்டும். அதில் தேர்வாகும் நகரங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு நிதி அளிக்கும்.

உள்ளாட்சி அமைப்பு நகர்ப்புற திட்டமிடல், வடிவமைப்பு, போக்குவரத்து வசதிகள், குடிநீர் வினியோகம் போன்ற வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு, நிதி வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற கட்டமைப்பு நிதி திட்டத்துக்கான விதிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், 2025 நிலவரப்படி, 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை உள்ள நகரங்கள் மட்டுமே, இதற்கு தேர்வு செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நகரத்தின் உள்ளாட்சி அமைப்பு உருவாக்கும் திட்ட மதிப்பில், 25 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும்; 50 சதவீத தொகையை, அந்த உள்ளாட்சி அமைப்பு, கடன் பத்திரங்கள் விற்பனை வாயிலாக திரட்ட வேண்டும். எஞ்சிய, 25 சதவீத தொகை, மாநில அரசு வாயிலாக பெறப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த தேசிய, மாநில அளவில் குழுக்கள் அமைப்பதற்கான வழிகாட்டுதல்களும் அதில் கூறப்பட்டுள்ளன.

மக்கள் தொகை



இதுகுறித்து, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 2025 நிலவரப்படி சென்னை தவிர்த்து, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளில் மக்கள் தொகை, 10 லட்சத்துக்கு மேல் உள்ளது.

இருப்பினும், இதில் கோவை, மதுரை மாநகராட்சிகளுக்கு, நிதி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement