கூடலுார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவிப்பு: அதிகாரிகள் மெத்தன போக்கால் அவதி

கூடலூர்: கூடலூருக்கு, சமவெளி பகுதியிலிருந்து ஓட்டு போட வந்த, மக்கள் திரும்பி செல்ல, கூடலூர் பஸ் ஸ்டாண்டில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமப்பட்டனர்.

கூடலூர் மக்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். உயர்கல்வியும் பயின்று வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் கூடலூர் வந்து, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

விடுமுறை முடிந்து, வேலைக்காக சமவெளி செல்ல கூடலுார் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. சமவெளி பகுதிக்கு கூடுதல் பஸ் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகளுடன் வந்த பெண்கள் சிரமப்பட்டனர்.



மக்கள் கூறுகையில், 'சமவெளியில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும், கூடலூர் மக்கள், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து மீண்டும் சமவெளி நோக்கி செல்கின்றனர். இதனால், சமவெளி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அதற்கு ஏற்ப கூடுதல் பஸ் இயக்காததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எதிர்காலத்தில் இதனை தவிர்க்க, முக்கிய நாட்களில், கூடலூரில் இருந்து சமவெளி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.' என்றனர்.

Advertisement