கல்குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிய 30 லாரிகள் 5 மணி நேரம் சிறைபிடிப்பு

மேட்டூர், மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி புதுகாளிக்கவுண்டர் அருகே உள்ள ராமசாமி மலையில் அருகருகே கனிமவளத்துறை அனுமதி பெற்று, 5 கல்குவாரிகள் செயல்படுகின்றன. அங்கிருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகள், டிப்பர் லாரிகளில் எம்.சாண்ட் ஏற்றி, தொப்பூர், மேச்சேரி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஆனால் காலையில் புதுகாளி

கவுண்டனுாரில் வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து, எம்.சாண்ட் சாலையில் கொட்டுவதோடு, அருகே உள்ள நிலங்களில் பரவி விவசாயத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த மாதம் அப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சு நடத்தி லாரிகளை விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு புதுகாளிகவுண்டனுாரில், எம்.சாண்ட் ஏற்றி சென்ற, 30க்கும் மேற்பட்ட லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மேட்டூர் கனிமவளத்துறை அலுவலர்கள், மேச்சேரி போலீசார் வந்து, மக்களிடம் பேச்சு
நடத்தினர்.
அப்போது, 'எம்.சாண்ட் ஏற்றிய லாரிகளை காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை மட்டும் இயக்க வேண்டும். அந்த லாரிகளில், எம்.சாண்ட் மீது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும்'
என்றனர்.
தொடர்ந்து அதிகாரிகள், தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் தனி குழு அமைத்து லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மதியம், 12:00 மணிக்கு பின், சிறைபிடித்த லாரிகளை மக்கள்
விடுவித்தனர்.

Advertisement