சித்தர் சிறப்பு திருவிழாவில் களி படைத்து வழிபாடு

சேலம், சேலம், இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சித்தர்கோவிலில், 'சித்தர் சிறப்பு' திருவிழா, கடந்த, 26ல் தொடங்கியது. நேற்று முன்தினம் சித்தேஸ்வரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர் சித்தேஸ்வரருக்கு, 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் பொங்கல், பாரம்பரிய களி படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இதில் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து, வேண்டுதல்களை நிறைவேற்றினர். பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள், அவரவர் நிலங்களில் விளைந்த அவரை கொட்டை, தேங்காய், ராகி, வெல்லம் உள்ளிட்டவற்றால், கோவில் முன் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் இனிப்பு, 'களி' செய்து, அரிசி, பருப்பு, காய்கறியால் பொங்கல், சாம்பார் வைத்து கோவிலுக்கு எடுத்து வந்து படையல் வைத்து வழிபட்டனர். இப்படி செய்தால் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நல்ல வளம் பெறுவார்கள் என்பது, பக்தர்களின்
நம்பிக்கை.
இன்று மதியம், சித்தர் திருவிளையாடல் நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை இரவு பூப்பல்லக்கு, சத்தாபரணம், மே, 1ல் மஞ்சள் நீர் ஊர்வலத்துடன் சித்தர் திருவிழா நிறைவு பெறும்.

Advertisement