'டிஜிட்டல் கைது' மோசடியை தடுக்க மத்திய அரசு அதிரடி: ஜனவரி முதல் 9,400 'வாட்ஸாப்' கணக்குகள் முடக்கம் 'சிம் கார்டு'களுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள்
- டில்லி சிறப்பு நிருபர் -
நாடு முழுதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, 'டிஜிட்டல் கைது' மோசடிகளை தடுக்க, மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் குறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த ஜனவரி முதல், இதுவரை 9,400 'வாட்ஸாப்' கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் டிஜிட்டல் கைது என்ற பெயரில் நடக்கும் இணையவழி மோசடி அதிகரித்து வருகிறது. நன்கு படித்தவர்கள் முதல் சாமான்ய மக்கள் வரை இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிமாற்றம் என வீடியோ அழைப்பு மூலம் மிரட்டி, மக்களை வீட்டிலேயே சிறைவைப்பது போன்ற சூழலை உருவாக்குவது தான் இந்த டிஜிட்டல் கைது மோசடி.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. டிஜிட்டல் மோசடிகளை தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 9,400 வாட்ஸாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், காவல்துறை அல்லது அரசு முத்திரைகளை, 'டிபி' எனப்படும் சுயவிபர படமாக வைத்துள்ள போலி கணக்குகளை கண்டறிந்து நீக்க 'லோகோ டிடெக்ஷன்' தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட அல்லது நம்பகத்தன்மை இல்லாத கணக்குகளில் இருந்து அழைப்புகள் வரும்போது, பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வசதி கொண்டு வரப்படுகிறது. சிம் கார்டு மொபைலில் இருந்தால் மட்டுமே வாட்ஸாப் இயங்கும் வகையில் சிம் - பைண்டிங் எனப்படும் பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படவுள்ளது.
சந்தேகத்துக்கு இடமான சிம் கார்டுகளை 2 - 3 மணி நேரங்களுக்குள் கண்டறிந்து அதனை முடக்குவதற்கான புதிய காலக்கெடுவை தொலை தொடர்பு துறை நிர்ணயித்துள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை சி.பி.ஐ., தாமாக முன் வந்து விசாரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது குஜராத் மற்றும் டில்லியில் நடந்துள்ள மிகப் பெரிய மோசடி வழக்கு விசாரணையை சி.பி.ஐ., கையில் எடுத்துள்ளது.
சிம் கார்டு வினியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, பயோமெட்ரிக் அடையாள சரிபார்ப்பு முறையை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுதும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரத்தை வங்கிகளுக்கு வழங்குவதற்கான புதிய விதிகள் 45 நாட்களுக்குள் உருவாக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
தட்சசீலா மருத்துவ கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு
-
தினமும் ஒரு ரோடு
-
ஆக்கிரமிப்பு அட்டகாசம்
-
பூச்சிமருந்து தெளிப்பதில் கவனம் தேவை! விவசாயிகளுக்கு ‘அட்வைஸ்’
-
திருக்கோவிலுாரில் முகாமிட்டிருக்கும் வவ்வால்கள் பறவை ஆர்வலர்கள் ஆச்சர்யம்
-
மானாமதுரையில் சித்திரை தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு