திருக்கோவிலுாரில் முகாமிட்டிருக்கும் வவ்வால்கள் பறவை ஆர்வலர்கள் ஆச்சர்யம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பழம் தின்னி வவ்வால்கள் முகாமிட்டு பறவை ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருக்கோவிலுார் சந்தப்பேட்டை, பறவைகளின் சரணாலயம் அளவுக்கு மாறியுள்ளது. ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, டி.எஸ்.பி., அலுவலகம் இப்படி பல அரசு அலுவலகங்கள் இங்கு உள்ளது. குறிப்பாக இவை அனைத்தும் திருக்கோவிலுார் - ஆசனுார் சாலையில் அமைந்துள்ளது. அங்கு, அடர்ந்த மரங்களும் உண்டு, இதனை தனது சூழலுக்கு ஏற்ற வளமான, பாதுகாப்பான வாழ்விடமாக கண்டறிந்து காகம், மைனா என பல வகை பறவைகள் ஆண்டாண்டு காலமாக தங்குகிறது.

மாலை 5:30 மணிக்கு இவை போடும் ரீங்காரம் காதை துளைக்கும். இது இரவு 7:00 மணி வரை நீடிக்கும். அதே போல் அதிகாலை 5:00 மணிக்கே இப்பகுதியில் குடியிருப்போரை எழுப்பி விடும்.

அதன் வரிசையில் சில மாதங்களாக வவ்வால்களும் இணைந்து இருக்கிறது. குறிப்பாக சப் கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்பு வளாகத்தில், செழித்து வளர்ந்திருக்கும் ஆலமரம் உள்ளிட்ட மர கிளைகளில் நுாற்றுக்கணக்கான வவ்வால்கள் தங்கியுள்ளது. வழக்கமாக இவை இரவு நேரத்தில் மட்டுமே இறை தேடக்கூடியது. பகல் முழுவதும் மரக்கிளையில் தலை கீழாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனை அப்பகுதி வாசிகள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

வவ்வால்களின் வருகையால் ஊருக்கு நல்லதா கெட்டதா என்ற விவாதமும் எழத் தொடங்கி இருக்கிறது. இது ஒரு பாலுாட்டி இனம். பாலுாட்டி வகையிலேயே பறக்கும் திறன் கொண்ட அபூர்வ இனம். எனவே இதனை பாலுாட்டி பறவையாக கருதுகின்றனர் ஆய்வாளர்கள். இரவு நேரங்களில் இறைத்தேடி வெகு துாரம் சென்று பழ வகைகளை சாப்பிடக்கூடியது. இவை விதை பரவல் மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டிற்கு பேருதவியாக உள்ளது. இதன் எச்சம் பயிர்களுக்கு சிறந்த உரமாக கருதப்படுகிறது.

இதன் உருவ அமைப்பை வைத்து பல கட்டுக் கதைகளை திரிக்கும் மக்களுக்கு மத்தியில் பெருக்கி வரும் வவ்வால்களின் எண்ணிக்கை பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.

Advertisement