பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரிப்பு

திருப்புவனம்:தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பிப்ரவரி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெளியில் நடமாடவே முடியவில்லை. கடும் வெயில் காரணமாக சிறு வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை வெயில் காரணமாக கண்மாய், ஊரணி உள்ளிட்டவை வறண்டு காணப்படுகின்றன. வைகை ஆற்றிலும் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு மணி நேரம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், தற்போது அரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது .எனவே பொதுமக்கள் குடிநீரை பாதுகாப்பாக பிடித்து வைப்பதற்கு பிளாஸ்டிக் குடங்களை வாங்கி வருகின்றனர். தேவை அதிகரித்ததை தொடர்ந்து பிளாஸ்டிக் குடங்களின் விலையும் அதிகரித்துள்ளது.10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் குடம் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், 20 லிட்டர் பிளாஸ்டிக் குடம் 90 ரூபாய் இருந்து 110 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது.

விற்பனையாளர் பெத்தையா கூறுகையில்,

நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஐந்து குடங்கள் வரை விற்பனையாகும். தற்போது 20 குடங்கள் வரை விற்பனையாகின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக பிளாஸ்டிக் குடங்களின் விலையும் உயர்ந்து விட்டது. கோடை காலம் என்பதால் குடிநீர் பிடித்து வைப்பதற்காக கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் குடங்கள் அதிக அளவு வாங்குகின்றனர், என்றார்.

Advertisement