'பணி'ப்போர் : மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவில் உச்சம் : 'டம்மி' ஆக்கப்படுகின்றனரா பி.இ., தகுதி ஏ.இ.,க்கள்

மதுரை; மதுரை மாநகராட்சியில் பி.இ., தகுதியுள்ள உதவிபொறியாளர்கள் (ஏ.இ.,க்கள்), டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (டி.ஏ.,), 'கூடுதல் பொறுப்பு' ஏ.இ.,க்களுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பாதாளச் சாக்கடை, குடிநீர் வினியோகம், ரோடு உட்பட அனைத்து பணிகளிலும், ஏ.இ.,க்களின் பங்கு அதிகம். பி.இ., தகுதியுடன் ''ஒரிஜினல் ஏ.இ.,''க்கள் 12, ஜெ.இ.,க்கள் 6 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு தலா 1 அல்லது 2 வார்டுகள் தான் ஒதுக்கப்பட்டுள்ளன.

மீதியுள்ள வார்டுகளுக்கு டி.ஏ.,க்கள், தேர்ச்சி திறன் நிலை 2 அந்தஸ்தில் உள்ளவர்கள் 40 பேருக்கு ''பொறுப்பு ஏ.இ., ஜெ.இ.,'' என வழங்கப்பட்டுள்ளது. இதனால் 'ஒரிஜினல் - பொறுப்பு' களுக்கு இடையே மறைமுக ஈகோ யுத்தம் ஏற்பட்டு, பொறியியல் பிரிவு பணிகள் பாதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பொறியாளர்களுக்குள் பனிப்போர் ஒரிஜினல் ஏ.இ.,க்கள் கூறியதாவது: மாநகராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன் பி.இ., தகுதியில் உள்ளவர்களே ஏ.இ., க்களாக இருந்தனர். அவர்களுக்கு வார்டுப் பணிகள் ஒதுக்கி, அவர்களுக்கு கீழ் டி.ஏ.,க்கள், ஸ்கில்டு 2, ஸ்கில்டு 1 நிலை அலுவலர்கள் பணியாற்றினர்.

காலப்போக்கில் பற்றாக்குறை என்ற பெயரில் ஒரிஜினல் ஏ.இ.,/ஜே.இ.,க்களை 'டம்மி' ஆக்கும் வகையில், டி.ஏ.,க்கள், ஸ்கில்டு 2, ஸ்கில்டு 1 நிலை அலுவலர்களுக்கு 'பொறுப்பு ஏ.இ., ஜெ.இ., பதவி வழங்கப்பட்டது. அப்போது குறைந்த எண்ணிக்கையில் இருந்த 'பொறுப்பு' பதவிகள், தற்போது ஒரிஜினல்களை விட எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

பின்னணி என்ன மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளின் 'எதிர்பார்ப்புகளை' ஒரிஜினல் ஏ.இ.,க்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களை 'டம்மி' ஆக்கும் வகையில் 'பொறுப்பு' ஏ.இ., ஜெ.இ.,க்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிலர் அரசியல் செய்தனர். இந்நிலையே தற்போதும் தொடர்கிறது. பிற மாநகராட்சிகளில் இந்நிலை இல்லை.

சுகாதாரப் பிரிவில், ஆய்வாளர்களும் (எஸ்.ஐ.,) பற்றாக்குறையாக தான் உள்ளனர். ஒரு எஸ்.ஐ.,க்கு 5க்கும் கூடுதலான வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன. அவர்களுக்கு கீழ் பணியாற்றும் மேஸ்திரி, அனிமேட்டர் நிலையில் உள்ளோருக்கு 'பொறுப்பு எஸ்.ஐ.,' வழங்கி, வார்டுகள் ஒதுக்குவதில்லை.

ஆனால் பொறியியல் பிரிவில் மட்டும் கீழ் நிலையில் உள்ளோருக்கு தாராளமாக 'பொறுப்பு ஏ.இ., ஜெ.இ.,' என பதவிகள் வழங்கப்படுகின்றன. இதனால் பணிகளின் தரம் கேள்விக்குறியாகிறது என்றனர்.

Advertisement