மதுரை 'ஸ்ட்ராங் ரூமில்' திடீர் மின்தடை சி.சி.டி.வி., 'கட்' ஆனதால் ஆய்வுக்கு வந்த வேட்பாளர்
மதுரை: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூமில்' மின்தடை ஏற்பட்டதால் காண்காணிப்பு தடைபட்டது. இதையறித்த மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் மையத்திற்கு வந்து, ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் ஏப். 23ல் நடந்த நிலையில், மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான மின்னணு ஓட்டு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி., கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மதுரை வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கான ஓட்டு இயந்திரங்கள் திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை பெய்த மழையால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் 15 நிமிடங்கள் சி.சி.டி.வி., கேமராக்கள் இயங்கவில்லை. இதையறிந்த மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன், நேரில் வந்து ஆய்வு செய்தார். பின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தொடர்பு கொண்ட நிலையில் நிலைமை சரிசெய்யப்பட்டது.
விசாரணையில், மழையால் சி.சி.டி.வி., இணைப்பு 'கட்'ஆனது தெரிந்தது.நமது நிருபரிடம் டாக்டர் சரவணன் கூறுகையில், ''மழையால் கதவுகளில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் மழைநீர் புக வாய்ப்புள்ளது. இதுகுறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்'' என்றார்.