தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!

130

- எல்.ஆதிமூலம் -


வெளியீட்டாளர், தினமலர்.


நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல், தமிழக அரசியலை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புரட்சியை நிகழ்த்தி காட்டியிருக்கிறார், ஜோசப் விஜய்.

பெயரில் திராவிடம் இல்லாத ஒரு கட்சி இங்கே ஆட்சிக்கு வரவே முடியாது என்ற வாதத்தை தகர்த்திருக்கிறது, அவருடைய தமிழக வெற்றிக் கழகம். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் சவால்கள் ஏராளம்.

அரசு நிர்வாகத்துக்குள் உள்ள அடுக்கடுக்கான திரைகளை, புதிய அரசு கிழிக்க வேண்டியிருக்கும். கிழித்தால் தான், வெளிப்பார்வைக்கு கவர்ச்சியாக காட்டப்பட்ட அழுக்குகளும், அநீதிகளும் வெளிச்சத்துக்கு வரும்; அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஊழலுக்கு, எத்தனை ஊற்றுக் கண்கள் என்பதை அடையாளம் காண முடியும்.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை என்று சொல்ல முடியாது; அதே சமயம், ஊழல் பேயை ஒழித்துக் கட்டியிருந்தால், இன்னும் பல மடங்கு வளர்ச்சியை நம் மாநிலம் கண்டிருக்க முடியும்.

பல திரைப்படங்களில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வதம் செய்யும் நாயகனாக விஜய் நடித்திருக்கிறார். இந்த தேர்தல் மூலமாக, ஒரு விரல் புரட்சியை நிகழ்த்தி காட்டியுள்ள இளைஞர் பட்டாளமும், பெண்களும், அந்த காட்சிகளை நிஜத்திலும் அரங்கேற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையில் தான், அவரை கோட்டைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் நடத்தினாலே, ஊழல் ஒழிந்து விடும்; மக்கள் எதிர்கொள்ளும் 90 சதவீத பிரச்னைகள் அதன் மூலமாக தீர்ந்து விடும். எதிர்கால இலக்குடன் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க, இந்த வெளிப்படைத்தன்மை நன்கு உதவும்.

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தும், தமிழக பெண்கள் நம்மை ஏன் நிராகரித்தனர் என்ற கேள்விக்கு, ஆட்சியை இழந்தவர்கள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்; கண்ணை மூடிக் கொண்டு சொல்ல முடியும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை தான் காரணம் என்று!

வேங்கைவயல் தொடங்கி,அண்ணா பல்கலைக் கழக வளாகம் வரை நடந்த சீரழிவுகளுக்கு பின்னணியில் உள்ளவர்கள், இன்னமும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக திரிகின்றனர். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை, நீதிமன்றங்களே வேதனையுடன் சுட்டிக் காட்டும் அவலம் நிலவுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் கிடைத்த நீதி என்பது, ஏனைய அநீதிகளை மறைக்கும் அளவுக்கு கனமான திரை அல்ல.

கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக காவல் துறையை முடக்குவது விபரீதமான விளையாட்டு. சட்டம் - ஒழுங்கை மட்டுமல்ல, சமூகத்தையே அது நரகக்குழியில் தள்ளிவிடும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதை காலம் கடந்து புரிந்து கொண்டுள்ளார்.

துவக்கத்தில் இருந்தே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டு, கட்சிக்காரர்களுக்கு கனமான கடிவாளம் மாட்டினால் மட்டுமே, அந்த ஆபத்தில் சிக்காமல், த.வெ.க., அரசு தப்ப முடியும்.

'டாஸ்மாக் கடைகளை மூடுவேன்; நீட் தேர்வை ஒழிப்பேன்' என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பிறகு, 'ஏன் நிறைவேற்றவில்லை?' என்று கேட்ட ஊடகங்களுக்கு, ஆட்சியாளர்கள் அளித்த எகத்தாளமான பதில்களைக் கண்டு முகம் சுளித்ததை கவனிக்க, ஆட்சியாளர்கள் ஏனோ மறுத்து விட்டனர். எதற்கெடுத்தாலும் திராவிடக் கொள்கை என்ற கேடயத்துடன் மத்திய அரசை எதிர்த்த போக்கை, அதனால் ஏற்பட்ட ஏராளமான திட்ட இழப்புகளை, இளைஞர்கள் அங்கீகரிக்கவில்லை.

ஏற்கனவே இயங்கும் ஆலைகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்க எந்த முன்னெடுப்பையும் தொடங்காமல், தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம் என்று பெருங்குழுவுடன் நாடு நாடாக பயணம் சென்று வந்து, பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்ததை தொழில் உலகம் கண்டுகொள்ளவில்லை.

சொந்த ஊருக்கு போவதற்கும், திருவண்ணா மலையில் கிரிவலம் செல்வதற்கும் பஸ் வசதி செய்து கொடுக்க இயலாத அரசாங்கம், கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுப்பதற்காக நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்துவதை மக்கள் ஜீரணிக்கவில்லை.

ஜாதி ஒழிப்பை திராவிட கொள்கை பிரகடனமாக அறிவித்தவர்கள், அதிலிருந்து வெகுதுாரம் விலகிச் சென்று ஒவ்வொரு ஜாதியாக தலைவர்களை தேடி கண்டுபிடித்து மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்டித் திறந்ததை அந்தந்த ஜாதியினரே பொருட்படுத்தவில்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பிழைகள் இருக்கின்றன, அரசு நிர்வாகத்தில். அனைத்தையும் களைந்தால் தான் நல்லாட்சி வழங்க முடியும் விஜய் அரசால். அதற்கு தேவையான அனுபவ அறிவு கொண்டவர்கள் அவரிடம் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது நாட்டுக்கு தெரியாது.

குறுகிய, சுயநல, திராவிட சித்தாந்த கண்ணோட்டம் இல்லாத உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர்; அவர்களில் சிறந்தவர்களை துறைவாரியாக அடையாளம் கண்டு ஆலோசகர் குழு உருவாக்கினால், அரசுக்கு நல்ல யோசனைகள் கிடைக்கும்.

நடை, உடை, பேச்சு, பிரசாரம் என பல வகையிலும் இதுவரை தமிழக தலைவர்கள் எண்ணிப் பார்க்காத மாற்றங்களை விஜய் பின்பற்றி வருகிறார். அதே மாற்றத்தை அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் செய்யத் துணிந்தால், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தமிழகம் முன்மாதிரி மாநிலம் ஆகும்.

மிகப்பெரிய சவால் தான்; ஆனால், சாதிக்க முடியாதது அல்ல!

Advertisement