சர்வதேச 'பிடே' செஸ் தொடர் :தமிழக வீரர்கள் தொடர்ந்து அசத்தல்

சென்னை: செங்கல்பட்டில் நடந்த சர்வதேச 'பிடே' செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், உள்ளூர் வீரர் ஹரி கணேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அகில இந்திய செஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் ஆதரவுடன், எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் சர்வதேச 'பிடே' செஸ் ஓபன் தரவரிசை தொடர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வளாகத்தில் நடந்தது.

இந்த போட்டியில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர், தங்களது தரவரிசை புள்ளிகளை உயர்த்தும் நோக்கில் பங்கேற்றனர். போட்டியின் இறுதிச்சுற்றுகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், தமிழகம் சார்பில் ஹரி கணேஷ், நாராயணன், விஜய் ஸ்ரீராம் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி முன்னிலையில் இருந்தனர்.

இறுதியில், செங்கல்பட்டைச் சேர்ந்த ஹரி கணேஷ் 7.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருடன் 7.5 பெற்ற சென்னை வீரர் விஜய் ஸ்ரீராம் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும், செங்கல்பட்டின் ராமநாதன் பாலசுப்பிரமணியன் 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பெற்றார்.

Advertisement