இரட்டைக் கொலை வழக்கில் 10 பேர் கைது

திருமங்கலம்: திருமங்கலம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மே 2 நள்ளிரவில் கப்பலுார் ரிங் ரோட்டில் சம்பகுளம் பிரிவு அருகே ஆரியப்பட்டி பெயின்டர் பத்மநாதனை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து உடலை ரோட்டில் வீசி சென்றது. அவரோடு வந்த வாடிப்பட்டி அய்யங்கோட்டையைச் சேர்ந்த மவுதன் என்பவரையும் சம்பக்குளம் – நிலையூர் ரோட்டில் வண்ணான் பாறை அருகே அதே கும்பல் வெட்டி கொலை செய்தது.

இவ்வழக்கில் நிலையூர் அழகு சேதுபதி 28, வசந்த் 23, கோடீஸ்வரன் 21, திருநகர் நெல்லையப்பபுரம் பாண்டிதுரை, நிலையூர் சங்கீத் 25, கூத்தியார் குண்டு ராஜவேல் 26, மதுரை டி.வி.எஸ்., நகர் விஸ்வா 24, திருப்புவனம் கருப்பு ராஜா 18, நிலையூர் தினேஷ் 25, கலையரசன் 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு துவரிமான் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மவுதன் மற்றும் நண்பர்கள் மது அருந்தினர். அப்போது அழகு சேதுபதி தரப்பினருடன் மோதல் ஏற்பட்டது. மவுதனை சமாதானம் பேச எதிர்த்தரப்பினர் அழைத்தனர். மே 2 இரவு நண்பர் பத்மநாதனுடன் டூவீலரில் வந்தபோது இருவரையும் வெட்டினர். டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த மவுதன் நிலையூர் ரோட்டில் தப்பி ஓடினார். டூ வீலரை ஓட்டி வந்த பத்மநாதன் தப்பிக்க முடியாததால் அவரை வெட்டி ரோட்டில் உடலை வீசியது. பின்னர் மவுதனை விரட்டிச் சென்று கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் மேலும் சிலரை ஆஸ்டின்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement