இன்ஸ்டாகிராமில் பழங்கிய பெண்ணை கத்தியால் குத்திய புதுச்சேரி நபர் கைது
வானுார்: ஆரோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணை, கத்தியால் குத்திய புதுச்சேரி நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் சத்தியநாராயணன், 35; இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக அவரது மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்துார் பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்த 26 வயது பெண்ணிற்கும், சத்தியநாராயணனுக்கும், இன்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்துார் பெண்ணிற்கு, புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் சத்தியநாராயணன் வேலை வாங்கி கொடுத்தார். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், வேலை செய்த இடத்தில் இருந்த நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சத்தியநாராயணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் அந்த பெண்ணிடம் பேச வேண்டும் என கூறி, மொரட்டாண்டி அருகேயுள்ள சதானா காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கு வேறொரு நபருடன் பழகியதை சத்தியநாராயணன் கேட்டு பிரச்னை செய்தார். இதனால், சத்தியநாராயணனுக்கும் அப்பெண்ணுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்தியநாராயணன், அப்பெண்ணின் வயிற்றில் குத்தி விட்டு தப்பித்தார். ரத்தவெள்ளத்தில் சரிந்த பெண்ணை, ஆரோவில் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்தியநாராயணனை கைது செய்தனர்.