ஆலந்துார், பல்லவன் ‘டிப்போ’வில் 200 மின்சார பஸ் இயக்க நடவடிக்கை

சென்னை: பல்லவன் மத்திய பணிமனை, ஆலந்துாரில் இருந்து 200 மின்சார பேருந்துகளை இயக்க, எம்.டி.சி., எனும் மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,500 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன; 34 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக, 624 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டமாக, 750 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான கட்டமைப்பு பணிகளை, மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மின்சார பேருந்துகள் இயக்க திட்டத்தில், பல்லவன் மத்திய பணிமனை, ஆலந்துார், ஆவடியில் இருந்து மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான கட்டமைப்புகளை, சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறோம்.

இதில் ஆலந்துார், பல்லவன் மத்திய பணிமனை – 2ல் பணிகள் முடிக்கப்பட்டு தயாராக உள்ளன. மற்றொருபுறம் 200 மின்சார பேருந்துகள் தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

அடுத்த இரண்டு மாதங்களில், இந்த மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement