ஆகாய தாமரை அகற்றம், கொசு ஒழிப்பில் பின்னடைவு பகிங்ஹாம் கால்வாய், அடையாறு ஆறு துாய்மை பணி மந்தம்

சோழிங்கநல்லுார்: பகிங்ஹாம் கால்வாயில் 5 அடி வரை உள்ள சகதியில், இயந்திரங்கள் மூழ்குவதால், ஆகாய தாமரை அகற்றம், கொசு ஒழிப்பு நடவடிக்கையில் முறையாக ஈடுபட முடியவில்லை என, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலம் வழியாக பகிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இதில், ஆகாய தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளதால், நீர் மாசடைந்து, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஆகாய தாமரையை, கால்வாயில் இறங்கி அகற்றும் வகையில், ரோபோடிக், ஆம்பிபியன் ஆகிய அதிநவீன இயந்திரங்கள், மண்டலம் வாரியாக வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், பகிங்ஹாம் கால்வாயில் 5 அடி வரை சகதி உள்ளதால், ரோபோடிக், சிறிய ஆம்பிபியன் இயந்திரங்கள் சகதியில் மூழ்கி விடுகின்றன. அதிநவீன ஆம்பிபியனை கொண்டு தான் ஆகாய தாமரையை அகற்ற முடிகிறது.

ஏரிகள், அடையாறு ஆறு, கூவம் போன்ற நீர்நிலைகளில் அவற்றை பயன்படுத்துவதால், பகிங்ஹாம் கால்வாயில் ஆகாய தாமரையை அகற்ற முடியாமலும், கொசு உற்பத்தியைதடுக்க முடியாமலும், சுகாதாரத் துறை திணறுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அதி நவீன ஆம்பிபியன் இயந்திரம், ஐந்து மண்டலங்களுக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. பகிங்ஹாம் கால்வாயில் ஆகாய தாமரையை அகற்றுவது, கொசு ஒழிப்பு பணியில் பெரிய சவாலாக உள்ளது.

மூன்று மண்டலங்களுக்கு சேர்த்து, ஒரு அதிநவீன ஆம்பிபியன் இயந்திரம் நிரந்தரமாக வழங்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிங்ஹாம் கால்வாய் மட்டுமின்றி, அடையாறு ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் ஆகாய தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Advertisement