பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; 12 நாட்களில் 5வது முறையாக மாற்றம்

14

சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுவதும், இன்றும் (மே 26) பெட்ரோல் விலை லிட்டருக்கு, 24 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 23 காசுகள் அதிகரித்தன. கடந்த, 12 நாட்களில் மட்டும், 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.

நம் நாட்டில் பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், டீலர்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விற்கின்றன.

மேற்காசிய நாடுகளில், கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.


இதனால், நம் நாட்டில், இம்மாதம், 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.14 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு, 3.11 ரூபாய் உயர்த்தப்பட்டன. பின், 19ம் தேதி, பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 86 காசு அதிகரிக்கப்பட்டன. மீண்டும், 23ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு, 82 காசு, டீசல் லிட்டருக்கு, 87 காசு உயர்த்தப்பட்டன.
அன்று, தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 105.31 ரூபாய்க்கும், லிட்டர் டீசல், 96.98 ரூபாய்க்கும் விற்பனையாகின. நேற்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு, 2.46 ரூபாய், டீசல் லிட்டருக்கு, 2.58 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர், 107.77 ரூபாய்க்கு விற்பனையானது. லிட்டர் டீசல், 99.56 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இன்றும் உயர்வு



இந்நிலையில் இன்றும் (மே 26) பெட்ரோல் விலை லிட்டருக்கு, 24 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 23 காசுகள் அதிகரித்தன. கடந்த, 12 நாட்களில் மட்டும், 5வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.01க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement