பாவூர்சத்திரத்தில் -மேம்பால பணியை விரைவில் முடிக்க கோர்ட் உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. குறும்பலாப்பேரி ராஜசேகரபாண்டியன் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி--செங்கோட்டை--கொல்லம் சாலையை நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்தல், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி மற்றும் ஆலங்குளம் ஏரி பால பணியை குறித்த காலவரம்பிற்குள் முடிக்க வலியுறுத்தி தமிழக நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், கலெக்டருக்கு 2023 ல் மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருள்பிரகாஷ் ஆஜரானார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், சாலை பணி மற்றும் இதர பால பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்படும் மேம்பால பணியை விரைவில் முடித்து பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. ரயில்வே மேம்பால பணியை இயன்றவரை விரைவில் நிறைவு செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement