ஜனநாயகம் மீறப்படவில்லை: அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்

சென்னை: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயகுமார் ஆகியோர், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

நிகழ்ச்சியின்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி:
த.வெ.க., வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியும் போலி பிரசாரம் செய்கின்றனர். த.வெ.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முதல்வராக்க முயற்சித்தனர்.

த.வெ.க.வை, புதிய அ.தி.மு.க.,வாகத்தான், அ.தி.மு.க., தொண்டர்கள் பார்க்கின்றனர். யார் வேண்டுமானாலும் த.வெ.க.,வுக்கு வரலாம்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், பலர் பேசி வருகின்றனர். அ.தி.மு.க., தலைமை மீது நம்பிக்கை இழந்தவர்கள், த.வெ.க.,வுக்கு வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.,வில் சேர்ந்தபோது, குதிரை பேரம் நடந்ததா? அ.தி.மு.க., இரண்டாக இருந்தபோது, ஸ்டாலினையும், உதயநிதியையும் சட்டசபையில் பன்னீர்செல்வம் புகழ்ந்ததை ரசித்தனர். அதற்கு, அப்போதைய சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேர், சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய பின், மரியாதை நிமித்தமாக, முதல்வர் விஜய் மற்றும் என்னை சந்தித்தனர். பிறகு, முறைப்படி, கட்சி அலுவலகம் வந்து இணைந்தனர். இங்கு, ஜனநாயகம் எங்கும் மீறப்படவில்லை. இவ்வாறு கூறினார்.

Advertisement