ரோகித் பத்மஸ்ரீ விருது பெற வராதது ஏன்?

புதுடில்லி: டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கினார். இந்திய கிரிக்கெட்டின் பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37, விருது பெற்றார். இதுவரை 7 டெஸ்ட் (230 ரன்), 164 ஒருநாள் (4,541), 195 'டி-20' (3,991) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை தொடரில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பைனலில் தென் ஆப்ரிக்காவை சாய்த்து, பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை வென்று தந்தது. தவிர சொந்தமண்ணில் இந்தியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த இரண்டாவது இந்தியர் ஆனார்.

வராதது ஏன்



இந்தியாவுக்கு, இரண்டு ஐ.சி.சி., கோப்பை (2024ல் 'டி-20' உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி) பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, விருதுக்கு தேர்வு பெற்றிருந்தார். லீக் போட்டியில் பங்கேற்றதால், போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், நேற்று நடந்த விழாவில், ரோகித் சர்மா பங்கேற்கவில்லை.

நடப்பு ஆண்டில் மற்றொரு நாளில் நடக்கும், இரண்டாவது கட்ட விருது விழாவில், இவர், 'பத்மஸ்ரீ' பெற்றுக் கொள்வார். தவிர, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பிரவீன் குமார், பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் சவிதா புனியா, பல்தேவ் சிங் (ஹாக்கி பயிற்சியாளர்), 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றனர்.

Advertisement