போக்சோ வழக்குகள்: மாநிலம் முழுவதும் விபரங்கள் சேகரிப்பு

கோவை: சூலுார் சிறுமி கொலை வழக்கை தொடர்ந்து, தமிழக அரசு உத்தரவின் பேரில், போக்சோ வழக்குகள் தொடர்பாக மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வு நடக்கிறது.

இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுக்கப்படும் காலதாமதம், விசாரணை நடைமுறை, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் விதம், வழங்கப்பட்ட தண்டனைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தற்போது தொகுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகள் குறித்த புள்ளி விபரங்கள் மாவட்டம் வாரியாக சேகரிக்கப்படுகின்றன. குறிப்பாக, வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிசெல்லும் சூழல்கள், சாட்சிகள் பாதுகாப்பு, மருத்துவ பரிசோதனை தாமதம், குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை வசதிகள் உள்ளிட்ட அம்சங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், போக்சோ வழக்குகளில் விசாரணையை விரைவாக முடிக்க தனிப்பட்ட கண்காணிப்பு அமைப்பு உருவாக்குவது, குற்றப்பத்திரிகையை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்வது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடனடி உளவியல் உதவி வழங்குவது போன்ற புதிய நடைமுறைகள் குறித்து உயர்மட்ட சிறப்பு குழு ஆலோசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தைகளுக்கு, 'நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கட்டாயமாக நடத்தவும் பரிந்துரைகள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. மாநில அளவில் ஒரே மாதிரியான விசாரணை நடைமுறையை அமல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement