விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்ற அடாவடி திருக்கழுக்குன்றம் ஏரி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையால் சர்ச்சை
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஏரி பகுதியில் விவசாய நிலங்களை வீட்டுமனையாக மாற்ற அமைக்கப்பட்டுள்ள சாலையால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபட் டோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றத்தில், பொதுப்பணித்துறை ஏரியை ஒட்டி மாதுளங்குப்பம் பகுதி உள்ளது. அப்பகுதியினர் ஏரிக்கரை மண்பாதையை பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
அப்பகுதியில், பலருக்கு விவசாயம் நிலம் உள்ளது. தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கும், விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க., பிரமுகர், தனக்கும், பிறருக்கும் சொந்தமான நிலத்தை, வீட்டுமனையாக மாற்ற, பல ஆண்டுகளுக்கு முன் முயன்றுள்ளார்.
வீட்டுமனைகளை விற்க, ஏரிக்கரையின் மீது உள்ள அகலம் குறைவான சாலை போதுமானதாக இருக்காது என்பதால், புதிய அணுகுபாதை அமைக்க முடிவெடுத்து, செங்கல்பட்டு சாலை, தண்ணீர்பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாதுளங்குப்பத்திற்கு, பொதுப்பணித்துறை ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியின் குறுக்கே பாதை அமைக்க, அப்போதே முயன்றுள்ளார்.
இதுதொடர்பாக, திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஒருவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அப்பணி தடைபட்டது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஏரி பகுதியில் சாலை அமைக்க, கடந்த டிசம்பரில் கட்டுமான கழிவுகள், கிராவல் மண் குவித்து, பாதை அமைக்க தயார்படுத்தினர்.
இதையறிந்து, திருக்கழுக்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலர்கள், பாதையில் பெரிய பள்ளம் பறித்து, பணிகளை தடுத்தனர்.
தி.மு.க., பிரமுகர்கள், துறை அலுவலர்களை சூழ்ந்து மிரட்டியதாக, பரபரப்பு ஏற்பட்டது. அத்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என, அலுவலர்களை அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது.
தற்போது, த.வெ.க., ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, ஏரி பகுதியில், இரவோடு இரவாக, கிராவல் மண் நிரப்பி சமன்செய்து, பாதை அமைப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், 'நீர்ப்பிடிப்பு பகுதியில், 1 கி.மீ., துாரத்திற்கும் மேலாக, சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையால், ஏரி பகுதி இரண்டாக பிளவுபட்டு, பாதிப்புகள் ஏற்படும்.
'சாலை அமைக்கவிடாமல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.