முதல்வர் விஜய் நாளை திருச்சி செல்கிறார் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்பு

2

- நமது நிருபர் - திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, தமிழக முதல்வர் விஜய் நாளை திருச்சி செல்ல உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 ஓட்டுகள் பெற்ற விஜய், 27,416 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் இனிகோ இருதயராஜை தோற்கடித்தார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரி மைதானத்தில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஜூன் 1ம் தேதி மாலை 4:00 மணிக்கு செயின்ட் ஜோசப் கல்லுாரி மைதானத்தில் நடைபெற உள்ள நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்காக பொதுக்கூட்ட மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது; பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், ''சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வரும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லுாரி வளாகத்திற்கு செல்கிறார்.

''பொதுக்கூட்டம் முடிந்த பின், மீண்டும் தனி விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்வர் வரும் போது, அவரது வாகனத்தை யாரும் பின்தொடர்ந்து வரவேண்டாம்,'' என்றார்.

Advertisement