மண்ணாடிப்பட்டு கொம்யூன் கிராம சபைக் கூட்டம்
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளிலும், புதுச்சேரி சட்டசபை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மே தினத்திற்கான கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் திடலில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராமத்திற்கு தேவையான குடிநீர், பஸ் நிறுத்த நிழற்குடை, சிமென்ட் களம், வடிக்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், துறைவாரியாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை அகற்றும் போது, மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்து கிராமங்களை துாய்மையாக வைத்து இருப்பேன் என, அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் பாஸ்கர், துறை மேற்பார்வையாளர் வசந்தகுமார், கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் ஆனந்தன், பாஸ்கரன் மற்றும் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.