அமைச்சர்களை நியமிக்காவிட்டால் போராட்டம்: த.வெ.க., எம்.எல்.ஏ., அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர் விரிவாக்கம் செய்து, இலாகா ஒதுக்கீடு வழங்க த.வெ.க., எம்.எல்.ஏ., சாய் சவரணன்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர், கூறியதாவது:
புதுச்சேரியில் தேர்தல் முடிவு வந்த பிறகும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யாமலும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காமலும் இருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் அனைவரிமும் பொறுப்புகளை பிரித்து கொடுத்து, அமைச்சர்களும் பணி செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், புதுச்சேரியில் எந்தவிதமான வேலைகளும் நடக்கவில்லை.
முதல்வர் எந்த துறையும் யாருக்கும் ஒதுக்கவில்லை, எல்லாவற்றையும் நான்தான் பார்க்கின்றேன் என்று தெளிவாக சொல்லிவிட்டால் அவரையே நாங்கள் நேரடியாக பார்த்து கேட்போம்.
ஆட்சியாளர்களின் பினாமிகள் நடத்தும் பள்ளி, கல்லுாரிகளில் லட்ச கணக்கில் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை யார்தான் கேட்பது. கேட்க வேண்டிய எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டசபையில் அறை கூட ஒதுக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் குறித்து கவர்னர் தலையிட்டு கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் கோவில், பள்ளி, கல்லுாரி அருகில் இருந்த மதுக்கடைகளை அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி முதல்வர் செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ரங்கசாமி உடனடியாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் த.வெ.க., போராட்டத்தை கையில் எடுக்கும். முதல்வர் ரங்கசாமி ஒரு ஆன்மிகவாதி. அது அவருக்கு மட்டும் தான் நன்மை; மக்களுக்கு என்ன நன்மை. அவர் தேசியவாதியாக இருந்தால் தான் மக்களுக்கு நன்மை, மக்களை பற்றி பேசுவார்' என்றார்.