அவசர மருத்துவ உதவி அழைப்பு சேவையில் கடலுார் மாவட்டம் முதலிடம்: ஏப்ரல் மாதத்தில், 8,117 பேருக்கு உதவி அசத்தல்
கடலுார்: தமிழகத்தில் அவசர மருத்துவ உதவி அழைப்புகளுக்கு சேவை செய்வதில் கடலுார் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை, ஏப்ரல் மாதத்தில் முதலிடத்தைப்பிடித்துள்ளது.
தமிழக அரசு மற்றும் இ.எம்.ஆர்.ஐ.,கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2008ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது.
கடலுார் மாவட்டத்தில் திட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறையினருடன் இணைந்து கலெக்டர் மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 54 எண்ணிக்கையிலான 108 ஆம்புலன்ஸ்களில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய அதிநவீன 108 ஆம்புலன்ஸ்கள் 11, பச்சிளம் குழந்தைகளுக்கான இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் இரண்டும், அடிப்படை வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் 41 ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
2026ம் ஆண்டு துவக்கத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை, கடந்த நான்கு மாதங்களில் பிரசவம் சம்பந்தமாக 4,529 நபர்களும், சாலைவிபத்துகளில் பாதிக்கப்பட்ட 6,673 நபர்களும், சுவாசக்கோளாறு சம்பந்தமாக 2,180 நபர்களும், இதய நோய் சம்பந்தமாக 2,182 நபர்களும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,013 நபர்களும், வலிப்புநோய் சம்பந்தப்பட்ட 999 நபர்களும் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக 17,755 நபர்கள் உட்பட 30,252 நபர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தகுந்த அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில் 179 பச்சிளம் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளுக்கான இன்குபேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் மூலம் பயனடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், கடலுார் மாவட்டத்தில் மட்டும் 8,117 நபர்களுக்கு 108 இலவச அவரச ஆம்புலன்ஸ் சேவை பயன்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் அதிக நபர்களுக்கு சேவை வழங்கியதில் மாநிலத்திலேயே கடலுார் மாவட்டம், முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களை அடைவதற்கு எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் 08:06 நிமிடங்களுக்குள்ளாகவும், அனைத்து விதமான அவசர அழைப்புகள் வந்தால் சென்றடைவதற்கு உண்டான சராசரி கால நேரம், 10:47 நிமிடங்களுக்குள்ளாகவும் செயல்பட்டுள்ளனர்.
மேலும், 108 அவசர மருத்துவ சேவை தேவைப்படுபர்களை துரிதமாக சென்றடைய அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளதால் விரைவாகவும், துரிதமாகவும் சென்றடைய முடியும்.
அவசரம் 108 செயலி மூலம், 108 ஆம்புலன்ஸ் புக் செய்தால் போன் அழைப்பு இல்லாமலேயே ஜி.பி.எஸ்.,மூலம் குறிப்பிட்ட இடத்தை விரைவாக சென்றடைகிறது.
மேலும் சாலை விபத்துகளில் காயமுற்றோரை சீக்கிரமாக சென்றடையும் வகையில் அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு ஹாட் ஸ்பாட் பகுதிகளாக கண்டறியப்பட்டு, ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்து விபத்துகளில் பாதிக்கப்படுவோரை உடனடியாக சென்றடைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த காலங்களில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகளவில் விபத்துகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகளில் முதலிடத்தைப் பிடித்த நிலையில், கடந்த மாதம் கடலுார் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் கடலுார் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைப்பகுதிகள் வழியாக விடுமுறைக்காக பலர் இடம்பெயர்ந்த போது ஏற்பட்ட சாலைவிபத்துகளும், விபத்து நடக்கும் பகுதிகளை முன்னெச்சரிக்கையாக கண்டறிந்து அவர்களை விரைவாக அடைய எடுக்கப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகளே காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உங்களின் சிறந்த சேவைக்கு மிக்க நன்றி. இது உண்மையிலேயே அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்.
But கடலூர் மாவட்டத்தில் ஒரு நல்ல ஹாஸ்பிடல்லும் இருப்பது போல தோன்றவில்லை