தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் தலைவர் உட்பட 26 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு


புதுடில்லி: தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் தலைவர் உட்பட 26 பேர் மீது பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்த்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய டில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட புகார்களை அடுத்து, நாடு முழுதும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு சொந்தமான இடங்களில், கடந்த 2022ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. இதன் முடிவில், அந்த அமைப்பின் தலைவர் ஓ.எம்.ஏ. சலாம் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன், அந்த அமைப்புக்கு தொடர்பிருப்பது உறுதியானதை அடுத்து, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், கடந்த 2022ல், பி.எப்.ஐ., அமைப்புக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு, டில்லியில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு, கூடுதல் அமர்வு நீதிபதி பிரசாந்த் ஷர்மா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: ஆயுதப் போராட்டங்கள் வாயிலாக, நம் நாட்டின் மதச்சார்பற்ற அரசை கவிழ்த்துவிட்டு, 2047ம் ஆண்டு அல்லது அதற்கு முன்னதாகவே இஸ்லாமிய ஆட்சியை நிறுவ, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது உறுதியாகியுள்ளது.

வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், குற்றஞ்சாட்டப்பட்ட அதன் தலைவர் உள்ளிட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், இந்தியாவுக்கு எதிராக பெரும் சதித் திட்டத்தை மேற்கொண்டதாக சந்தேகம் எழுகிறது.

கடும் குற்றங்களை செய்யக்கூடிய சட்டப்பூர்வ அமைப்பாக செயல்பட்ட பி.எப்.ஐ., மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் 26 பேர் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய என்.ஐ.ஏ.,வுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

பயங்கரவாத செயல்களுக்கு ஆட்சேர்த்தல், ஆயுதங்களை சேகரித்தல், அரசுக்கு எதிராக போர் தொடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். விசாரணை அடுத்த மாதம் 10ம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement