யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் தேர்வில் முக அங்கீகார தொழில்நுட்பம் வெற்றி

புதுடில்லி: யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சமீபத்தில் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக முக அங்கீகார தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசின் முக்கிய பதவிகளுக்கான தகுதித் தேர்வை ஆண்டுதோறும் யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. இத்தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடக்கும்.

இந்த ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு கடந்த மாதம் 24 அன்று நாடு முழுதும் உள்ள 2,072 தேர்வு மையங்களில் நடந்தது. இத்தேர்வுக்கு மொத்தம் 8.19 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 5.49 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது. இது போன்ற முறைகேடுகளை முற்றிலும் ஒழிக்க சமீபத்தில் நடந்த முதல்நிலை தேர்வில் முக அங்கீகாரச் சோதனை தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டது.

இதற்கான, மொபைல் போன் செயலி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின் ஆளுகை பிரிவின் தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டது.

தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு அந்த செயலி, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் வழங்கப்பட்டன. விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படமும், தேர்வு எழுத வந்திருப்பவரின் முகமும் பொருந்துகிறதா என்பதை இதன் மூலம் சரிபார்த்தனர். இந்த சோதனையை முடிக்க ஒரு நபருக்கு சில விநாடிகள் மட்டுமே ஆனதாக யு.பி.எஸ்.சி., கூறியது.

Advertisement