தேவையில்லாத வேலை!

'இவர் எதற்கு வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறார்...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பதவி வகிப்பவர், ஓம் பிரகாஷ் ராஜ்பர். இவர், சுல்தேவ் பாரதிய சமாஜ் என்ற கட்சியின் தலைவர். இந்த கட்சி, பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

இவர், அரசியலுக்கு வரும் முன், ஆட்டோ டிரைவராக இருந்தவர். இதனால், அமைச்சரான பின்னும் அவ்வப்போது தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு ஆட்டோவில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதை கிண்டலடித்த அகிலேஷ் யாதவ், 'இன்றைய அரசியல் விளம்பர மயமாகி விட்டது. நான்கு, ஐந்து கார்கள் வைத்திருப்பவர்கள் எல்லாம், ஏழைகள் போல் ஆட்டோவில் வருகின்றனர்...' என்றார்.

இதனால் கடுப்பான ராஜ்பர், 'நான் ஆட்டோவில் வருவதால், அகிலேஷுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. பணத்திலேயே பிறந்து, பணத்திலேயே வளர்ந்து, 'ஏசி' காரில் வலம் வரும் இவருக்கு, எங்களை போன்றவர்களை பார்த்தால் கிண்டலாகத் தான் தெரியும்...' என பதிலடி கொடுத்தார்.

'அகிலேஷ் யாதவுக்கு இது தேவையில்லாத வேலை...' என புலம்புகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள்.

Advertisement