இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதல்
மார்காவ்: கோவாவில், பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 8வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஐந்து முறை (2010, 2012, 2014, 2016, 2019) கோப்பை வென்ற இந்திய அணி, அரையிறுதியில் பூடானை வென்றது. மற்றொரு அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்திய வங்கதேச அணி, பைனலில் அசத்தினால் 'ஹாட்ரிக்' பட்டம் (2022, 2024, 2026) வெல்லலாம்.
இந்திய பெண்கள் ஏமாற்றம்
காகமிகஹாரா: ஜப்பானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்தியா சார்பில் நவ்ஷீன் நாஸ் (3வது நிமிடம்), கிரண் எக்கா (54வது) தலா ஒரு கோல் அடித்தனர். பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஏமாற்றிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. அடுத்து 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவை சந்திக்கிறது.
ஆண்களுக்கான அரையிறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. இந்திய அணிக்கு ஆஷிஸ் தானி பூர்த்தி (12, 49, 53, 56வது நிமிடம்), ஷாரூக் அலி (35வது) கைகொடுத்தனர். பைனலில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
இந்திய ஜோடி தோல்வி
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் ஸ்சே பெய் கோ, நுார் இசூதீன் ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 12-21, 10-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
-----