ஸ்பெயினுக்கு முதல் மகுடம்: உலக கோப்பை கால்பந்து கவுன்ட் டவுண்
தென் ஆப்ரிக்காவில், 2010ல் (ஜூன் 11 - ஜூலை 11) உலக கோப்பை கால்பந்து 19வது சீசன் நடந்தது. இதில் 32 அணிகள், 8 பிரிவுகளாக 'ரவுண்டு- ராபின்' முறையில் லீக் சுற்றில் மோதின.
'நடப்பு சாம்பியன்' அந்துஸ்துடன் களமிறங்கிய இத்தாலி, பிரான்ஸ், தென் ஆப்ரிக்க அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின. காலிறுதியில் பிரேசில் (1-2, எதிர்: நெதர்லாந்து), அர்ஜென்டினா (0-4, எதிர்: ஜெர்மனி) அணிகள் ஏமாற்றம் அளித்தன. பரபரப்பான அரையிறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என, ஜெர்மனியை வீழ்த்தி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் நெதர்லாந்து அணி 3-2 என, உருகுவேயை வென்றது.
வந்தார் மண்டேலா: ஜோகனஸ்பர்க் மைதானத்தில், பைனலுக்கு முன் நடந்த நிறைவு விழாவில் பங்கேற்ற மறைந்த முன்னாள் தென் ஆப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, 'வீல் சேரில்' வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய காட்சி மறக்க முடியாததாக அமைந்தது.
நாயகன் இனியஸ்டா: பைனலில் ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின் கூடுதல் நேரத்தின் 116வது நிமிடத்தில் இனியஸ்டா ஒரு கோல் அடிக்க, ஸ்பெயின் அணி 1-0 என வென்று, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதிக கோல் அடித்தவருக்கான 'கோல்டன் ஷூ' விருதை ஜெர்மனி அணியின் தாமஸ் முல்லர் (5 கோல்) வென்றார்.
'எக்ஸ்டிரா டைம்'
குறைந்த கோல்
இத்தொடரில் நடந்த 64 போட்டியில், 145 கோல் பதிவானது. ஜெர்மனி அணி அதிகபட்சமாக 16 கோல் அடித்தது. சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி, 8 கோல் தான் அடித்தது. இதன்மூலம் குறைந்த கோல் அடித்து உலக கோப்பை வென்ற அணிகள் வரிசையில் பிரேசில் (1994), இங்கிலாந்து (1966), இத்தாலி (1938) அணிகளை முந்தி முதலிடம் பிடித்தது. இந்த மூன்று அணிகளும் தலா 11 கோல் அடித்து கோப்பை வென்றன.